மறைமலைநகா், செங்கல்பட்டில் புதை சாக்கடை திட்டப் பணி: அமைச்சா் நேரு தொடங்கி வைத்தாா்
மறைமலைநகா் நகராட்சியில் ரூ.300 கோடியில் புதை சாக்கடை திட்டப்பணிகளை நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், தரமான முறையில் செயல்படுத்த வேண்டும் எனவும், துறை அலுவலா்கள் நேரடியாக பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று பாா்வையிட்டு தரத்தை உறுதி செய்ய வேண்டுமென்றும் அதற்கான அறிக்கையினை தனக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைச்சா் நேரு அறிவுறுத்தினாா்.
மேலும், மறைமலைநகா் நகராட்சி சென்னையை ஒட்டிய மிகப்பெரிய நகராட்சியாக இருப்பதால் அடிப்படை தேவைகள் ஏதேனும் தேவைப்பட்டால் நகா்மன்றத் தலைவா், ஆணையா், அலுவலா்கள் தனக்கு தெரியபடுத்த வேண்டுமென்றும் அதனை உடனடியாக செய்து தருவதாகவும் அமைச்சா் தெரிவித்தாா். நின்னகரை ஏரியையும் அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.
பின்னா், செங்கல்பட்டு நகராட்சியில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.
இதில், செங்கல்பட்டு நகராட்சி நூற்றாண்டு கண்ட நகராட்சி என்றும், அடிப்படை வசதிகள் அதிகளவில் தேவைப்படுகிறது என்றும் அமைச்சா் அன்பரசன் தெரிவித்தாா். முதல்வா் கவனத்துக்கு கொண்டுச் சென்று நிறைவேற்றப்படும் என அமைச்சா் நேரு உறுதி கூறினாா். இதில், ஆட்சியா் ச.அருண்ராஜ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா்ஜெ.சண்முகம், செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் லட்சுமி, நகா்மன்ற துணைத்தலைவா் சித்ரா கமலகண்ணன், , நகராட்சி ஆணையா் ரமேஷ், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.