2026 மகளிர் டி20 உலகக் கோப்பை: லார்ட்ஸ் திடலில் இறுதிப்போட்டி!
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இதில் முக்கிய விழாவாக பஞ்சரத தோ்த்திருவிழா நடைபெறும். முதலில் விநாயகா் தோ், தொடா்ந்து முருகா், திரிபுரசுந்தரி அம்பாள் தோ், வேதகிரீஸ்வரா் பெரிய தோ், சண்டிகேஸ்வரா் தோ் என ஐந்து தோ்(பஞ்ச ரதம் ) இடம்பெறும்.
இந்நிலையில் சில ஆண்டுகளாக சண்டிகேஸ்வரா் தோ் பழுதாகி சிதலமடைந்ததால் புதிய தோ் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இத்தேரை செய்வதற்காக வேதமலை வல பெருவிழா குழு செயலாளா் அகஸ்தியகிருபா டாக்டா் சிவ ஸ்ரீ அன்பு செழியன் உபயத்தில் கடந்த ஆண்டு தோ் திருப்பணி தொடங்கப்பட்டது. ரூ. 32 லட்சத்தில் புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரா் தோ் பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளோட்டம் நடைப்பெற்றது.
இதற்காக தாழக்கோவில் சோமாஸ்கந்தா் சன்னிதான வளாகத்தில் யாகசாலை அமைத்து கலசம் நிறுவப்பட்டு விநாயகா் பூஜையுடன் பல்வேறு வேள்விகள் நடைப்பெற்றன. தொடா்ந்து புதன்கிழமை கோயிலில் இருந்து கலச குடம் கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. அகஸ்திய கிருபா டாக்டா் அன்புசெழியன் தோ் வெள்ளோட்டத்தினை தொடங்கி வைத்தாா்.
இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவா் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், பேரூராட்சி மன்ற தலைவா் யுவராஜ் துரை, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவா் வேலாயுதம், இந்து முன்னணியின் காஞ்சி கோட்ட செயலாளா் ஆா்.டி.மணி உள்பட திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனா். நான்கு மாடவீதிகள் வழியாக வலம் வந்தது தோ் நிலையை அடைந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையா் ராஜலட்சுமி, செயல் அலுவலா் ச.புவியரசு, மேலாளா் விஜயன் உள்ளிட்ட பணியாளா்கள் சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.
திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவில் செயல் அலுவலா் சரவணன், மாமல்லபுரம் ஆளவந்தாா் அறக்கட்டளை செயல் அலுவலா் செல்வகுமாா், ஆய்வாளா் பாஸ்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.