திருப்பூர்: கொலையில் முடிந்த மாணவர்கள் சண்டை; 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது; நட...
மற்றுமொரு மாநில சுயாட்சித் தீர்மானம் - மாற்றம் விளையுமா?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்தியுள்ள ஆட்சி முறை இணையிலாத் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளது என்பது ஒரு சிறப்பாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால், அதுவே பல நடைமுறைச் சிக்கல்களையும் அவ்வப்போது நம்மை எதிர்கொள்ள வைக்கிறது.
நாம் நம்மை ஒரு ‘கூட்டாட்சி’ (Federal) அல்லது அரைக்-கூட்டாட்சி (Quasi-federal) நாடாகச் சித்திரித்தாலும், அதனைச் செயல்படுத்தும்போது, மாநிலங்கள் மீது ஒன்றிய அரசின் விரிவான கட்டுப்பாடுகள் நிலவுவதை மறுக்க இயலாது. முதலில் கூட்டாட்சி என்ற சொல்லைத் தவிர்த்து ‘ஒன்றியம்’ ( Union) என்ற சொல்லையும், அதற்கிசைவான ஆட்சி முறையையும்தான் நமது அரசியல் அமைப்புச் சட்ட வடிவமைப்பாளர்கள் நமக்கு வழங்கிச் சென்றுள்ளார்கள் என்ற புரிதலோடு மேற்செல்ல வேண்டும், வாங்க.
இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல்கள் 1951 இல் நடைபெற்றன. அப்போது முதல் 1957இல் கேரளத்தில் அமைந்த கம்யூனிஸ்ட் ஆட்சி தவிர - முதல் மூன்று பொதுத் தேர்தல்கள் வரை- ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினரே ஆண்டு வந்தனர். அதனால், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் ஏற்பாடுகள் (Constitutional arrangements) நடைமுறையாகும்போது, ஆரம்ப நிலை ஒன்றிய - மாநில உறவுச் சிக்கல்கள் நிலவின என்றாலும், அவை பெரும்பாலும் வெடித்து வெளிப்படவில்லை. நம் நாட்டில் கடைசியாக நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநிலச் சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து நடைபெற்ற நான்காவது பொதுத் தேர்தல் (1967) முதல் மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசுகள் ஏற்படத் தொடங்கின.
1967இல் தேர்தலின் மூலம் காங்கிரஸ் அல்லாத கட்சிகளால் ஒன்பது மாநில அரசுகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையில் முதல் (காங்கிரஸ் அல்லாத) திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) ஆட்சி உதயமானது.
1967 தேர்தலுக்கு அடுத்த மாதத்திலேயே உ.பி.யில், காங்கிரஸில் சரண்சிங் ஏற்படுத்திய பிளவால், தனது அரசை அக்கட்சி இழந்தது. ஆகப் பத்து மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத, பிராந்தியக் கட்சிகள் மாநில ஆட்சிகளைப் பொறுப்பேற்று நடத்தத் தொடங்கிய அந்தக் காலம் (1967) முதலே ஒன்றிய அரசிடம் இருந்து, மாநிலங்கள் அதிக அதிகாரங்களைக் கோரத் தொடங்கின. அவ்வாறு மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட, அவசியமானால் அரசியல் சட்டத்தைத் திருத்தலாம் என்ற வலியுறுத்தல்களும் வளர்ந்தன.
இந்த நேரத்தில் அரசியல் சட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கூறிய கருத்து ஒன்றை எடுத்துரைப்பது பொருத்தமாக இருக்கும்.
‘’அரசியல் சட்டம் என்பது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துபவர்கள் மனப்போக்கால், செயல்பாடுகளால், அரசியல் சட்டமே மோசமானதாக இருப்பது போல் ஆகிவிடும்; அதேவேளை, அரசியல் சட்டம் எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும்கூட, அதை நடைமுறைப்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால், அரசியலமைப்புச் சட்டம் நல்லதாக, எளிதானதாக நன்கு செயல்படுத்தக் கூடியதாக ஆக்க முடியும்’’ என்று அம்பேத்கர் கூறிச் சென்றுள்ளார் (CAD Bk 6. P - 975). நடைமுறையில், அரசியலமைப்புச் சட்டத்தை நல்லதாக, எளிதானதாக, மாநிலங்களுக்குரிய தன்னாட்சி வழங்கப்பட்டு, நன்கு செயல்படுத்தக் கூடியதாக ஆக்க நல்லவர்கள் நாட்டில் வரவில்லையே, இதுவரை.
‘’நல்ல மனிதர்கள், நல்ல சட்டங்களைவிட மேலானவர்கள்” என்பது நடைமுறையில் சரி வராது போல் தெரிகிறது. பிற்போக்கான சட்டங்கள் மட்டுமல்ல, அதிகாரக் குவியலில் ஆர்வங்கொண்ட தலைவர்களாலும் நாட்டில் பெரும் அவலங்களை ஏற்படுத்திவிடக் கூடும். ஆகவே, குறிப்பாக நம் நாட்டில், நல்ல சட்டங்களும் நல்ல மனிதர்களும் தேவைப்படுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மாநிலங்களவையில்,1962 இல் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் - தனது முதல் உரையில் (கன்னிப் பேச்சில்) நாடாளுமன்றம் அதுவரை கேட்டறியாத குரலாக, “ எங்களுக்குச் சுய நிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம்“ என்று அறிஞர் அண்ணா முழங்கினார்.
“அதிருப்தி கொண்டிருக்கும் அமைதியற்ற மாநிலங்களாகச் சேர்ந்திருப்பதைவிட, தேச உணர்வும், ஒற்றுமையும் பாராட்டும் நாடுகளின் கூட்டமைப்பாக நாம் தொடரலாம்” என்று ஒன்றிய அரசுக்கு மாநிலங்களவையில் தனியாளாக நின்றுகொண்டு வழிசொன்னார் அண்ணா.
ஒன்பது மாநிலங்களை 1967 இல் எதிர்க்கட்சிகளிடம் இழந்த காங்கிரஸுக்கு சென்னை மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் அல்லாத ஒரு மாநிலக் கட்சி தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற்றது பெருவலியானது. விடுதலைக்குப் பின் சென்னை மாகாணத்தில் அமைந்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசின் முதல்வராக குறுகிய காலமே பணியாற்றிய பேரறிஞர் அண்ணா, 1969ஜூன் 17 ஆம் நாள் மாநிலச் சட்டப் பேரவையில் மிகத் தெளிவாகவும் உறுதிபடவும் ‘’நாட்டைப் பாதுகாக்கவும் அது சிதைந்து விடாமல் காக்கவும் உரிய அதிகாரங்களை ஒன்றிய அரசு வைத்துக் கொள்ளட்டும்; மற்ற எல்லா அதிகாரங்களும் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்” என்று மாநிலத் தன்னாட்சிக்காக முரசொலித்தார்.
இதனைச் செயலாக்க “ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தைத் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்து, செயல்படுத்த உரிய பரிந்துரைகளை, ஆலோசனைகளை வழங்குமாறு வேண்டப்பட’’ இந்திய அரசியல் பரப்பில், மாநில தன்னாட்சிக்கான முதல் குரலாக ஒலித்த குரல் பேரறிஞர் அண்ணாவுடையது என்பது குறிப்பிட உரியது.
நமது அரசியல் சட்டத்தின் பொதிவுகளிலுள்ள ஆதார வளத்தின் மீது தீரா நம்பிக்கை கொண்டிருப்பவர்களில் ஒருவரான புகழுடை வழக்குரைஞர் நானி ஏ. பல்கிவாலா போன்றவர்கள் “அரசியல் சட்டத்தைத் திருத்தாமலே, ஒன்றியத்தில் ஆள்பவர்கள் இதயம் சற்று மாறினாலே போதும்; எளிதில் மாநிலங்கள் விரும்பும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த அவர்கள் உதவ முடியும் என்று கருத்து வெளியிட்டுவந்தனர். இக்கூற்று ஒருவேளை உண்மையாக இருக்கக் கூடும்; ஆனால், அதிகாரங்களை விட்டுத்தர ஒன்றியத்தில் ஆள்பவர்கள் இதயம் மாறுவதேயில்லையே, எப்போதும், இப்போது வரையும்.
விடுதலைக்குப் பின் இந்தியாவில் அமைந்த ஒன்றிய அரசு எதுவும் - தற்போதுள்ள ஒன்றிய அரசு உள்பட - தம்மிடமுள்ள அதிகாரங்களை மாநில அரசுகளிடம் பகிர்ந்துகொண்டு, சிறப்பான கூட்டாட்சித் (Federalism) தத்துவத்தின் செயல்பாட்டை இந்நாட்டில் எடுத்துக்காட்டாக நடத்திக் காட்டும் எண்ணம் சிறிதும் இல்லாதவர்களாகத்தான் இருந்து வருகின்றனர். தேவையிருந்தும் நேர்மறையான மனமாற்றங் கொள்ளாதவர்களாகவே – எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - அதிகாரப் பகிர்வுக்கு எதிரான மனநிலையோடுதான், மாறாது இருந்து வருகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், ஒன்றிய அரசுகள் அவ்வப்போது கண்துடைப்பாக, ஒப்புக்கு அமைக்கும் மாநிலத் தன்னாட்சியுரிமை தொடர்பான ஆணையங்கள் (ஹனுமந்தப்பா கமிஷன் 1969, சர்க்காரியா கமிஷன், பூன்ச்சி கமிஷன்); குழுக்கள் (எம்.சி. செதல்வாட் குழு 1969, இந்திய நாடாளுமன்றச் சங்கம் 1970, ஆளுநர்கள் குழு 1971) முதலியவை அளிக்கும் பரிந்துரைகளைப் பத்திரமாகக் குளிர் சேமிப்பில் (Cold Storage) போட்டுவைப்பதே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒன்றிய அரசுகள் அமைக்கும் ஆணையங்கள் / குழுக்களின் பரிந்துரைகளுக்கே ‘குளிர் சேமிப்பு’ அல்லது ‘குப்பைக் கூடைகளே’ இருப்பாகும்போது, ஆங்காங்கே, அவ்வப்போது மாநிலங்கள் அமைக்கும் மாநிலத் தன்னாட்சி ஆணையங்கள் (தமிழ்நாடு, ராஜமன்னார் கமிட்டி1969); பிற தீர்மானங்கள்/ அறிக்கைகள் (பஞ்சாப், அனந்த்பூர் சாஹிப் தீர்மானம், 1973, மேற்கு வங்கச் சட்டப்பேரவையின் மாநிலத் தன்னாட்சிக் குறிப்பாணை 1977, கர்நாடக சட்டப்பேரவை முன்வைக்கப்பட்ட மாநிலத் தன்னாட்சி வெள்ளை அறிக்கை 1983, ஶ்ரீநகரில் 17 கட்சிகள் - 59 தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டுத் தீர்மானங்கள் 1983) ஆகிய எதனையும், அந்தந்தக் காலங்களில் ஆண்டுவந்த ஒன்றிய அரசுகள் சிறிதும் சட்டை செய்யவே இல்லை.
இத்தகைய அரசியல் சூழலில், தமிழ்நாட்டில், மாநிலத் தன்னாட்சி குறித்து - முந்தைய இராஜமன்னார் கமிட்டி (1969) அமைக்கப்பட்டுச் சுமார் 56 ஆண்டுகளுக்குப் பின்-அதே பொருட்பாடு குறித்து மீண்டும் ஒரு உயர்நிலைக் குழுவைத் தற்போதைய தமிழக முதல்வர் அமைத்திருப்பது, என்ன பயன் விளைவிக்கும் என்ற ஐயங்களே அதிகம் எழுந்து முன்நிற்கின்றன.
இந்தியாவில் முதன்முதலாக ஒன்றியம் - மாநிலங்கள் உறவுகள் குறித்து ஆராயவும், மாநிலத் தன்னாட்சியுரிமைகள் குறித்துப் பரிந்துரைக்கவும், மாநில முதல்வர் ஒருவரால் அமைக்கப்பட்ட முதல் உயர்நிலைக் கமிட்டி எனும் சிறப்புப் பெற்ற ஜஸ்டிஸ் இராஜமன்னார் கமிட்டியை, 1969 இல் முதல்வராக இருந்த மு. கருணாநிதி அமைத்தார். அவரமைத்த கமிட்டியில் மூவருமே எந்தக் கட்சியையும் சாராத ‘ஞமன்கோலன்ன’ நடுநிலையாளர்கள்; தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2025 இல் அமைத்துள்ள குழு அமைப்பில், குறிப்பாக ஒருவரைப் பற்றி நடுநிலையாளர் எனச் சொல்ல இயலாது. அவர் ஆளும் கட்சியுடன் ஒட்டிய உறவிலிருப்பவர். மற்றொருவர் குழு அமைக்கிற முதல்வரிடம் முன்பு பணியாற்றியவர்.
இராஜமன்னார் கமிட்டியில், மூவரில் இருவர் ‘ஒருபால் கோடாது’ பழுத்த அனுபவம் நிறைந்த நீதியரசர்கள்; மற்றொருவர் உலகளவில் மதிப்புப் பெற்றிருந்த, ஆகச் சிறந்த கல்வியாளர். மூவருமே தமிழ்நாட்டில் பணியாற்றியவர்கள் என்றாலும், தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் அல்லர். ஆகவே அக்குழுவின் பரிந்துரைகள், ஒருதலைச்சார்பின்றி, நடுநிலையோடு உருவாகிவந்தன என்று அரசியலாளர்களால் பெரிதும் மதிக்கப்பட்டன.
ஒன்றியம் – மாநிலங்கள் உறவுகள் குறித்து, அரசியல் சட்டத்தின் உள்பொதிவுகளை ஆழ்ந்து ஆராய்ந்து உரிய பரிந்துரைகளைத் துணிவாகவும், காரண விளக்கங்களோடும் முழுமையாக வெளிப்படுத்திய முதல் ஆவணமாக இன்றுவரை இராஜமன்னார் கமிட்டி அறிக்கை (1971), அக்கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களாலும் மதிக்கப்படுகிறது.
“ராஜமன்னார் கமிட்டி அறிக்கை, ஒரு மாநில அரசு அமைத்த குழுவின் அறிக்கையாக இருந்தபோதிலும், மாநிலச் சார்போ, ஒன்றியச் சாய்வோ இல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தின்பால் சமன் நின்று அளிக்கப்பட்டுள்ளது” என்பது அரசியலமைப்புச்சட்ட ஆய்வாளர்கள் கருத்து.
மேலும், “இந்தியாவில் ஒன்றியம் –மாநிலங்களுக்கிடையேயான அனைத்து விஷயங்களையும், அரசியல்சட்ட நிழலில் அலசி ஆராய்ந்து, தெளிவாக, உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கும் “இறுதி வார்த்தையாக (Last word) இருக்கும் தகுநிலை கொண்டது” இராஜமன்னார் கமிட்டி அறிக்கை எனப் புகழ்பெற்ற நீதியரசர் பி.என். பகவதி ஒரு கருத்தரங்கில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.
1969 இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் கமிட்டி, மே 27, 1971 இல் முதல்வர் மு. கருணாநிதியிடம் நூறுக்கு மேல் பரிந்துரைகள் கொண்ட தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றான, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களிலும், நாடு முழுவதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பும் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களையும், ஒன்றியப் பிரதேசங்களையும் கலந்தாலோசித்துக் கருத்தொற்றுமையில் செயல்பட ஏதுவாக மாநிலங்கள் கவுன்சில் (Inter-State Council) என்ற நிரந்தர அமைப்பை நிறுவ வேண்டும் என்ற பரிந்துரை செய்தது. இப்பரிந்துரை, ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் செயல்பாட்டுக்கும் வந்துள்ளது குறிப்பிட உரியது.
கூட்டாட்சிக் (Federal) கோட்பாடு என வெளிப்படையாக நமது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாமல், ஒன்றியம் (Union) என்ற சொல்லையே டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட சட்ட வரைவுக் குழுவினர் தேர்ந்தெடுத்துக் கொண்டதால், அடிப்படையாக நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றியத்திற்கே அதிக அதிகாரங்களைக் கொடுப்பதாகத்தான் தோன்றுகிறது.
மாநிலத் தன்னாட்சிக்கான ஆதரவு அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் இல்லை; எங்கேனும் இருப்பதாகக் காட்டினாலும், அது ஒன்றிய மேலாதிக்கத்திற்கு உட்பட்டதாக ஆக்கப்பட்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம். இந்த நிலையை விரிவாக ஆராய்ந்த இராஜமன்னார் கமிட்டி, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஏவுரைகளை வழங்கும் (கட்டளையிடும்) அதிகாரத்தை - அரசியல் சட்ட பிரிவுகள் 256, 257, 339 (2) ஆகியவற்றைக் - கைவிட்டுவிடப் (To be Omitted) பரிந்துரைத்தது.
குறிப்பிட உரிய அடுத்த பரிந்துரையாக, அரசியல் சட்ட ஏழாம் இணைப்பு அட்டவணை (Schedule VII), பட்டி I, (List I) ஒன்றியத்துப் பட்டி (Union List) , பொதுவியல்பட்டி (List III, Concurrent List) ஆகியவை பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தொடர்ந்து உருவாக்கி வருவதால், குறிப்பாகப் பொதுவியல்பட்டியிலுள்ள பொருட்பாடுகளில் (Subjects) மாநில அரசுகளும், ஒன்றியமும் சட்டங்கள் இயற்றலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், இரண்டு சட்டங்களும் முரண்படுகிற நேர்வுகளில், முறைப்படி மாநிலச் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டத்தைவிட, நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் – மாநில அரசு இயற்றிய சட்டத்திற்கு முன்போ பின்போ நிறைவேற்றப்பட்டிருந்தாலும் - அந்த ஒன்றிய அரசுச் சட்டமே மேலோங்கும் என அரசியல் சட்டப் பிரிவு 251 வரையறுத்துள்ளது. இது மாநில அரசு சட்டத்தை, சட்டமியற்றும் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது.
இந்தச் சட்டப்பிரிவின் மூலம் பொதுவியல்பட்டி முழுவதுமே (List III Concurrent List ) ஒரு வகையில், ஒன்றிய அரசின் கைவசமாகிவிடும் வாய்ப்பிருக்கிறது. எனவே, அந்த இரு பட்டியல்களைத் தீவிர மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. அப்பட்டியல்களில் உள்ள பொருட்பாடுகளை மாநிலங்களின் தன்னாட்சிக்கு உதவும் வகையில், மாநிலப் பட்டியின் (List II) பொருட்பாடுகளாகத் தெளிவுற மறுபங்கீடு செய்ய, ஒரு உயரதிகாரக்குழு ஒன்று அமைக்கப்படவும் இராஜமன்னார் குழு பரிந்துரைத்தது. இதனை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லையே.
இதுபோக, ஒன்றியம் விரும்பினால் மாநிலப் பட்டியிலுள்ள பொருட்பாடுகளைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றிக்கொள்ளும் அதிகாரம் ( அரசியல் சட்டப்பிரிவு 250 மூலம்) வழங்கப்பட்டிருப்பதால், மாநிலப் பட்டியில் எண்ணிட்டுத் தொகுக்கப்பட்ட பொருட்பாடுகளில் எதன் மீதும் (நெருக்கடி நிலை நிலவும்போது) நாடாளுமன்றம் சட்டமியற்றலாம்.
மேலும், மாநிலப்பட்டியலில் இருந்த பொருட்பாடான கல்வி, 1976 இல் இந்திரா காந்தி அரசால் மேற்கொள்ளப்பட்ட 42ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் 3-1-1977 முதல் பொதுவியல் பட்டியில் புகுத்தப்பட்டது. இதனைப் பயன்படுத்தியே இப்போதைய ஒன்றிய அரசு, புதிய கல்விக்கொள்கை மூலம் தமிழகத்தில் 1967 முதல் நிலவி வரும் இருமொழிக் கொள்கையை இடறப் பார்ப்பதை நாம் அறிவோம்.
அரசியல் சட்டப் பிரிவுகளில் மிக அதிகமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட (1950 முதல் 2025 வரை, 115 முறைகளுக்கு மேல், அதில் பாதிக்கு மேல் ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆளுங்காலத்தில்) தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்துவிட்டுக், குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்த வழி செய்யும் அரசியல் சட்டப் பிரிவு 356 - மற்றும் அவ்வாறான நேர்வுகளில் மாநில சட்டப் பேரவையின் அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு மாற்ற வழியமைக்கும் அரசியல் சட்டப் பிரிவு 357 ஆகிய இரண்டையும் கைவிட்டுவிடப் (Omit) பரிந்துரை செய்தது. அரசியல் சட்டப் பிரிவு 356 அரசியலமைப்பு நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டபோது இப்பிரிவு, ஒரு “தேவையான கொடுமை (Necessary Evil)“. ஆகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், அது தேவையற்ற கொடுமையாகவே தொடர்ந்து வருகிறது இன்றளவும்.

மாநில அரசுகளால் முறைப்படி நிறைவேற்றப்படும் சட்டமுன் வடிவுகளை மாநில ஆளுநருக்கு முன்னிடப்பட்டு, அவரது ஏற்பிசைவு (Ascent) பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கும் அரசியல் சட்டப் பிரிவு 200, மற்றும் , சில சட்ட முன்வடிவுகளைத் தம் விருப்பம்போல் ஆளுநர்கள் குடியரசுத்தலைவரின் கருதுகைக்கும் (Consideration), ஏற்பிசைவிற்கும் ஆளுநர்கள் அனுப்ப வழிவகுக்கும் அரசியல் சட்டப் பிரிவு 201 ஆகிய இரண்டையும் நீக்கறவு செய்யப் (Repeal) பரிந்துரைத்தது.
மேலும், அவசர காலத்தில் ஒன்றிய அரசுக்குச் சிறப்புக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் அ.ச. பிரிவு 352, போர், அந்நிய ஆக்கிரமிப்புக் காலங்களில் மட்டுமே பயன்படுத்த உரியதாக மாற்றித் திருத்தம் செய்யப்படவும், புதிது புதிதாக அகில இந்தியப் பணிகளை ஏற்படுத்த வகை செய்யும் அ.ச.பிரிவு, 312, தேவையில்லாமல் மாநிலங்களை அச்சுறுத்துவதுபோல மாநிலங்கள் விரும்பாத, கேட்டுக்கொள்ளாத நேர்வுகளிலும் மத்திய ரிசர்வ் படையை மாநிலங்களில் குவிப்பதைத் தடுக்க அ.ச. பிரிவு 355 இல் திருத்தம் என விரிவான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன இராஜமன்னார் குழு அறிக்கையில்.
பரிந்துரைகள் செய்ய மிக நடுநிலையான இராஜமன்னார் குழுவை அமைத்த முதல்வர் மு. கருணாநிதி, அப்பரிந்துரைகளைத் தமது கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரசொலி மாறன், இரா.செழியன் ஆகிய இருவர் கொண்ட குழுவை அமைத்துப் பரிசீலிக்கச் செய்தார். அவர்கள் அளித்த அறிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஐந்து நாள்கள் விரிவான விவாதம் நடைபெற்றது. தீர்மானத்தை ஆதரித்து 161 சட்டப்பேரவை உறுப்பினர்கள், எதிர்த்து 23 பேர் மட்டும் என்ற நிலையில், மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைக்குப் பின், ஒரு மாநிலச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மாநிலத் தன்னாட்சிக்கான முதல் தீர்மானம் அது.
முதல்வர் மு. கருணாநிதி மாநில உரிமைகளை அரசியல் சட்டத்திற்குட்பட்டுத் தொகுக்க, சட்டப்பேரவையில் தீர்மானங் கொண்டுவரத் தேர்ந்தெடுத்த காலம் குறிப்பிட உரியது. தான் முதல்வர் பொறுப்பேற்ற ஆரம்பக் காலத்திலேயே அவர் இச்செயல்களை ஆரம்பித்து நிறைவேற்றிவிட்டார். ஆதலால் அவருக்கு தனது ஆட்சிக்காலம் முழுவதும் மாநில சுயாட்சிக்கு இராஜமன்னார் குழு செய்த பரிந்துரைகளையும், தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும் வலியுறுத்தித் தொடர்ந்து, பேச, எழுத, வாய்ப்புக் கிடைக்கும் போதல்லாம் ஒன்றிய அரசை வற்புறுத்த அதிக வாய்ப்புகள் அவருக்கிருந்தன. அதன் விளைவாகத்தான் பஞ்சாப் அனந்த்பூர் சாஹிப் தீர்மானம் 1973, மேற்கு வங்காள அமைச்சரவை மேற்கொண்ட மாநிலத் தன்னாட்சி குறிப்புரை 1977, கர்நாடக முதல்வராக இருந்த இராமகிருஷ்ண ஹெக்டே அம்மாநிலச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மாநிலத் தன்னாட்சிக்கான வெள்ளை அறிக்கை 1983, ஶ்ரீநகர் தீர்மானம் 1983, என மாநிலத் தன்னாட்சிக்கான பல குரல்கள் நாடெங்கும் எழவும், ஓங்கி ஒலிக்கச் செய்யவும் முதல்வர் மு. கருணாநிதிக்கு காலமும் வாய்ப்புகளும் இருந்தன.
ஆனால், தமிழ்நாடு முதல்வர் தனது தற்போதைய பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில் (2025) நின்று கொண்டு மாநிலத் தன்னாட்சி தொடர்பான உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளார். குழு இரண்டாண்டுகளுக்குள் அறிக்கை அளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டாண்டு காலத்திற்கு முன்பாகவே, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் (2026) வர இருக்கிறது. ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து, அமைக்கப்பட்டிருக்கும் குழுவின் அறிக்கையைப் பெற்று மேல் நடவடிக்கைகளைத் தொடர்வோம் என நம்பிக்கை கொண்டிருப்பது இயற்கைதான். ஆனால், தேர்தல் முடிவு மாறாக இருந்தால், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் மாநிலத் தன்னாட்சிக்கான குழுவின் அறிக்கையை யார் பொருட்படுத்துவார்?
காலந்தவறி 2025 இல் அமைக்கப்பட்டிருக்கும் நீதியரசர் குரியன் ஜோசப் குழுவிற்கு, இராஜமன்னார் கமிட்டி அளித்துள்ள மிக விரிவான பரிந்துரைகளுக்கு மேலதிகமாக - இராஜமன்னார் குழு அறிக்கையைத் தொடர்ந்து நாட்டில் விளைந்தெழுந்துள்ள அனந்த்பூர் சாஹிப் தீர்மானம் 1973 முதல் ஶ்ரீநகர் தீர்மானங்கள் (1983) வரை மாநிலத் தன்னாட்சிப் பரிந்துரைகளுக்கும் கூடுதலாக - அரசியலமைப்புச் சட்டத்தையொட்டிப் புதிய பரிந்துரைகள் அளிக்கப் பெரிதும் வாய்ப்புகளில்லை என்பதே உண்மை.
மேலும், இராஜமன்னார் குழு அறிக்கையை அதன் பரிந்துரைகளைத் தி.மு.க.வின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரசொலி மாறன், இரா.செழியன் ஆகியோர் கூர்ந்து அலசி ஆராய்ந்து ஏற்றுக்கொண்டுள்ளனர். நிலைமைகள் இவ்வாறிருக்கப் புதியதொரு கமிட்டிக்கான வலுவான காரணங்கள் ஏதுங் காணோம்.
இதுவரை அமைக்கப்பட்டுள்ள மாநிலத் தன்னாட்சிக் குழுக்கள், தீர்மானங்கள் முதலியன, பொதுவாக நமது அரசியல் சட்டத்தில் இடையூறாகவுள்ள அரசியல் சட்டப்பிரிவுகள் 200, 201, 240, 249, 252, 352, 354, 356, 357 ஆகியவை அறவே நீக்கப்பட, அல்லது தற்போதுள்ள நிலையிலிருந்து திருத்தப்பட வலியுறுத்தல்களைச் செய்துள்ளன. அனந்த்பூர் சாஹிப் தீர்மானம், தனிச் சீக்கியத் தன்னாட்சி கொண்ட நாடு உருவாக்கப்பட வேண்டியது. அனந்த்பூர் சாஹிப் தீர்மானம், மத்திய அரசின் அதிகாரங்கள் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல்தொடர்பு, நாணயம் போன்றவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் போர்க்குரல் ஒலித்தது. மேற்கு வங்க அமைச்சரவை, இந்தியக் குடியரசின் விளக்கத்தில், 'கூட்டாட்சி' என்ற வார்த்தையைச் சேர்க்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோல், அரசியலமைப்பில் ‘ஒன்றியம்’ (Union) என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘கூட்டாட்சி’ (Federal) என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஶ்ரீநகர் தீர்மானம் மாநிலத் தன்னாட்சிக்கான பல வேண்டுகோள்களுடன், காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து தந்துவந்த அ.ச. பிரிவு 370மீது ஒன்றிய அரசு கைவைக்கக் கூடாது என்றும் குறிப்பாக வேண்டியது.
ஆனால், தற்போது ஒன்றியத்தை ஆண்டுவரும் கட்சி, ஒருதலையாக நின்று அப்பிரிவையே அரசியல் சட்டத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டது. நீக்கப்பட வேண்டும் என ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டுவரும் அ.ச.பிரிவுகள் 356, 357, 200, 201 போன்றவை பற்றி, ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் மாறினாலும் அதிகம் துஷ்பிரயோகமாகும் அப்பிரிவுகளைத் தக்க வைத்துக்கொள்ளும் நாட்டம் மாறாமலே நிலைபெற்று வருகிறதைக் குறிப்பிட்டறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய குழுவின் அறிக்கையும், அறிக்கையைத் தொடர்ந்த செயல்பாடுகளும் 2026சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் தாக்கம் பெறக்கூடிய நிலையில் இக்குழு அறிக்கை காகிதப்பூவாகத்தான் இருக்கும் என்பது கசப்பான நிதர்சனம்.
இடனும், காலமுமறிந்து இக்குழு அமைக்கப்பட்டிருந்தால், ஒருவேளை இராஜமன்னார் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளையும் அதனைத் தொடர்ந்து நாட்டில் விளைந்துள்ள பிற கமிட்டிகளின் முடிவுகளையும் ஒருங்கிணைத்து மீண்டும் தக்க வடிவில் வலியுறுத்த உதவும் கருவியாக அதனை வார்த்தெடுத்துப் பயன்படுமாறு செய்திருக்கலாம்.
***
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்]
இதையும் படிக்க: அணு ஏவுகணையா, அரசியல் சட்டப் பிரிவு 142?