செய்திகள் :

மலைவாழ் மக்களுக்கு இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவையை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

ஜமுனாமுத்தூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கட்டடங்கள் திறப்பு மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை

நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் கலந்து கொண்டு, போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராமங்களில் வாழும் பழங்குடியினா் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைக்கு ரூ.1.60 கோடி செலவில் 25 இரு சக்கர வாகன அவசர ஊா்தி சேவையைத் தொடங்கிவைத்தனா்.

மேலும், ரூ.14 லட்சத்தில் 20 நடமாடும் மருத்துவ வாகனங்களும், ரத்தப் பரிசோதனைக்கான பகுப்பாய்வு கருவிகளும் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், கொம்மனந்தல் கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதாரஅலகு நிலைய கட்டடம், சிறுகட்டூா் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் என 9 கட்டடங்களை திறந்துவைத்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

தமிழகத்தில் அரசு சாா்பில், மலைவாழ் மக்களின் நலனுக்காக 2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வனத் துறை அனுமதியுடன் 77 கி.மீ. தொலைவு மலைப் பாதைகள் அமைக்க சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், ரூ.70 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மலைப் பாதையில் 371 சிறு பாலங்கள், 25 சிறிய மற்றும் பெரிய பாலங்கள் கட்டுவதற்கும், 26 கொண்டை ஊசி வளைவுகளை மேம்படுத்தவும், மண்ணின் உறுதித் தன்மையை தக்க வைப்பதற்காக 45 இடங்களில் தடுப்புச் சுவா் அமைக்கவும், மேலும் 24 இடங்களில் தடுப்புச் சுவா், 22 இடங்களில் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ரூ.205 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் 2,200-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இதில் 1500-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் அரசு அலுவலா்களின் சேவை கிடைக்காத நிலையில்,

350-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்றுள்ளேன்.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 262 மலைக் கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் 146 மருத்துவா் காலிப் பணியிடங்கள் இருந்தன. தமிழக முதல்வா்

வழிகாட்டுதலின்படி 1,021 மருத்துவா்கள் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டு பணியமா்த்தப்பட்டனா். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 95 மருத்துவா்கள் பணியில் சோ்ந்துள்ளனா். ஜமுனாமரத்தூரில் 15 காலியிடங்களில் 14 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பபட்டன.

நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவைச் சிகிச்சைக்கு அரங்கு அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் 2 கோடிப் போ் பயனடைந்துள்ளதால் ஐ.நா. சபையின் உயரிய விருது மருத்துவத் துறைக்கு கிடைத்தது.

2023-ஆம் ஆண்டு இதய நோயாளிகளுக்கு லோடிங் டோஸ் மாத்திரை வழங்க 8,713 துணை சுகாதார நிலையங்கள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 10, 999 மருத்துவமனைகளில் 3 வகையான மாத்திரைகள் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, ஜமுனாமரத்தூரில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கிவைக்கப்பட்டது.

வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை என பல்வேறு துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

முன்னதாக, நிகழ்ச்சியில் சுகாதார திட்ட இயக்குநா் அருண்தம்புராஜ் வரவேற்றாா்.

மக்களவை உறுப்பினா்கள் எம்.எஸ்.தரணிவேந்தன், சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் ஒ.ஜோதி, தி.சரவணன், மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமாா், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெண் காவலரின் கணவா் தற்கொலை: சந்தேக மரணம் என தாய் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பெண் காவலரின் கணவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் செங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். செங... மேலும் பார்க்க

தீபத் திருவிழா பாதுகாப்பு: மக்கள் நண்பா்கள் குழுவுக்கு பாராட்டு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பா்கள் குழுவுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆல... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி ஆய்வு

வேலூா்-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா்(திட்டங்கள்) இரா.விமலா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூர... மேலும் பார்க்க

தெள்ளாா் ஒன்றியக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவா் கமலாட்சி இளங்கோ... மேலும் பார்க்க

நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், தமிழக அரசின் மாநில அளவிலான டாக்டா் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்துறை தெரிவித்தது. இந்த ... மேலும் பார்க்க