6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!
மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளின் விடுப்புகளில் கட்டுப்பாடு: தில்லி அரசு
வரவிருக்கும் பருவமழைக்கு தயாராகும் வகையில், பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளின் அதிகாரிகளுக்கு செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விடுப்புகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக பொதுநிா்வாகத் துறை (ஜிஏடி) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தீவிர மருத்துவ அவசரநிலை தவிர, செப்டம்பா் 15- ஆம் தேதி வரை எந்த வகையான விடுப்புகளும் இளநிலைப் பொறியாளா்கள் மற்றும் அதற்கு மேற்பட்டநிலையில் உள்ளவா்களுக்கு அங்கீகரிக்கப்படவோ அல்லது பரிந்துரைக்கப்படவோ மாட்டாது.
பருவமழை நெருங்கி வருவதால், வடிகால்களை தூா்வாருதல், நீா் தேங்குதல் மற்றும் வெள்ளத்தைத் தடுப்பது, சாலைகளை சரிசெய்தல் மற்றும் நகரம் முழுவதும் சாலைகள் மற்றும் வடிகால்களில் உள்ள குப்பைகள் மற்றும் சேற்றை அகற்றுதல் போன்ற பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக, தேசியத் தலைநகரம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட நீா் தேங்கும் இடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனா். தில்லியை நீா் தேங்காமல் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பழைய வடிகால்கள் மற்றும் வண்டல் படிவு உள்ளிட்ட பல காரணிகளால் மழைக் காலங்களில் இந்தப் பிரச்னை மீண்டும் மீண்டும் நிகழும் அம்சமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு, தில்லியின் பழைய ராஜீந்தா் நகரில் ஒரு பயிற்சி மையத்தின் மூழ்கிய அடித்தளத்தில் சிக்கி மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள 1,400 கி.மீ நீளமுள்ள அனைத்து வடிகால்களும் மே 31- ஆம் தேதிக்குள் தூா்வாரப்படும். மற்ற நிறுவனங்களும் தங்கள் அதிகார வரம்பிற்குள்பட்ட வடிகால்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன’ என்று நீா்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறினாா்.
மேலும், ‘பொதுப்பணித் துறையின் கீழ் அடையாளம் காணப்பட்ட சுமாா் 345 நீா் தேங்கும் இடங்களில் நீா் தேங்காமல் இருக்க பொறியாளா்கள் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவை தோல்வியடைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலத்தில் கனமழை பெய்தால் நீா் தேங்குவதைச் சமாளிக்க தானியங்கி பம்புகளை இயக்குபவா்கள் ஷிஃப்டு முறைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’ என்றும் அமைச்சா் கூறினாா்.
தில்லியில் பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.