ஏப். 29, 30 தேதிகளில் ரே பரேலி, அமேதி செல்லும் ராகுல்!
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்லவுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செல்லவுள்ளார்.
அதற்கு முன்னதாக, ஏப்ரல் 29 ஆம் தேதியில், தனது தொகுதியான ரே பரேலி தொகுதிக்கு செல்லும் ராகுல் காந்தி, மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கவுள்ளார்.
தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதியில், அமேதி தொகுதியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இதயப் பிரிவைத் திறந்து வைக்கவுள்ளார். மேலும், அதே நாளில் இந்திரா காந்தி நர்சிங் கல்லூரியையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
சஞ்சய் காந்தி மருத்துவமனையானது, புதுதில்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், அறங்காவலராக ராகுல் காந்தியும் செயல்படுகின்றனர்.
இதையும் படிக்க:பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா: மதுரை ஆதீனம்