புதுச்சேரி: `கொலை வழக்கு முதல் நில அபகரிப்பு வரை' - கொலையான பாஜக பிரமுகர் ரௌடி உமாசங்கர் பின்னணி
புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் தேசிய OBC பிரிவின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவரின் மகன் உமாசங்கர். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன. அதேபோல தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் விபசார வழக்குகளும் இருக்கின்றன. புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் மாநில இளைஞரணித் தலைவராக இருந்த இவர், அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

அப்போது உமாசங்கரின் பிறந்தநாளுக்கு அவர் வீட்டுக்கே சென்று அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்தும் அளவுக்கு, அவருடன் நெருக்கமாக இருந்தார். அதன் பிறகு தன்னுடைய வீடு இருந்தது காமராஜர் தொகுதி என்பதால், பா.ஜ.க எம்.எல்.ஏ-வான ஜான்குமாரின் ஆதரவாளராக மாறினார். அப்போது ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் முன்னணி தலைவர்களையே கடுமையாகப் பேசியதால், அவரின் இளைஞரணி துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு எம்.எல்.ஏ ஜான்குமாருக்காகத் தொகுதி வேலைகளைப் பார்த்துக்கொண்டு, அவருடனேயே வலம் வந்தார்.
இந்த நிலையில்தான் தமிழக லாட்டரி வியாபாரியின் மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டினை, புதுச்சேரி அரசியலில் புகுத்துவதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார் எம்.எல்.ஏ ஜான்குமார். அதற்கான அனைத்துப் பணிகளுக்கும் எம்.எல்.ஏ ஜான்குமாருக்குப் பக்கபலமாக இருந்தார். தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பணிகள், முதலியார்பேட்டையில் சார்லஸ் மார்ட்டினின் அலுவலகம் திறந்தது என அனைத்துப் பணிகளிலும் ஜான்குமாரின் நிழலாக மாறினார் உமாசங்கர். 2026 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, புதுச்சேரியில் தன்னுடைய பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட முடிவெடுத்தார் சார்லஸ் மார்ட்டின்.

அதன்படி இன்று (27.04.2025) கருவடிக்குப்பம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்தார் சார்லஸ் மார்ட்டின். அதற்காக புதுச்சேரி முழுவதும் எம்.எல்.ஏ ஜான்குமாரின் குடும்பம் சார்பில் ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரௌடி உமாசங்கர் செய்து வந்தார். நேற்று இரவு அந்த தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முன்னேற்பாடு பணிகளைப் பார்த்துவிட்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் உமாசங்கர் கொல்லப்பட்டார்.