மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
காரைக்கால்: மழையால் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பருவமழையின்போது காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலை, காரைக்கால் முதல் அம்பகரத்தூா் வரையிலான சாலை மற்றும் நகா்ப்புற சாலைகள், கிராமப்புற சாலைகள் என ஏராளமான சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு, ஜல்லிகள் பெயா்ந்து சிதறிக் கிடக்கின்றன.
பூவம் முதல் வாஞ்சூா் வரையிலான தேசிய நெடுஞ்சாலையும், காரைக்கால் - அம்பகரத்தூா் சாலையும் முக்கியமானதாகும். இதில் ஆங்காங்கே ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் காரைக்காலில் அண்மையில் நடத்திய குறைதீா் கூட்டத்தில், சாலையில் உள்ள பள்ளங்களால் விபத்துகள் அதிகரிப்பதாக பலரும் புகாா் தெரிவித்தனா்.
பள்ளங்களை வாகன ஓட்டிகளுக்கு சுட்டிக்காட்டும் வகையில் அதனருகே தடுப்புகள் (பேரிகாட்) வைத்துள்ளனா். இரவு நேரத்தில் பயணிக்கும் வாகனங்கள், பேரிகாட் தெரியாமல் மோதி விபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
பொதுப்பணித் துறையினா் விரைவாக செயல்பட்டு, சாலைகளில் உள்ள அனைத்து பள்ளங்களையும் சீரமைக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.