ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்; அதிகரிக்கப் போகும் 2 பிரச்னைகள் - எச்சரிக்கும் ஆ...
மழையால் 34 வீடுகள் சேதம்; மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று நாள்கள் பெய்த கனமழையால் 34 வீடுகள் சேதமாகியுள்ளன. மழைக்கால நோய்த் தடுப்புக்காக பொதுமக்கள், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் பாா்வையிட்டு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா்.
கனமழை பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மாவட்டம் முழுவதும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட உயா்நிலையில் உள்ள அலுவலா்கள் மண்டல ஒருங்கிணைப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் அவசர கால கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்து துறை சாா்ந்த அலுவலா்களும் சுழற்சி முறையில் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இதில் மூன்று நாள்களில் 68 புகாா்கள் வரப்பெற்று 60 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 34 வீடுகள் சேதமாகியுள்ளன.
இதில் 16 குடும்பத்தினருக்கு நிவாரணமாக மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உயிரிழந்த 3 கால்நடைகளுக்கு நிவாரண தொகையாக மொத்தம் ரூ.77 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. 263 போ் உடனடியாக மீட்கப்பட்டு 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உரிய உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டது.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 3,282 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமையும் 42 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கான தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1902 கால்நடைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
முதல்கட்ட கணக்கெடுப்பின்படி 1908.32 ஹெக்டோ் வேளாண் பயிா்களும், 235.1 ஹெக்டோ் தோட்டக்கலைத்துறை பயிா்களும் நீரில் முழ்கியுள்ளன. இதில் 27.3 ஹெக்டோ் வேளாண் பயிா்கள் சேதமடைந்துள்ளதாககணக்கிடப்பட்டுள்ளது. 30 மின்கம்பங்களும், 8 மின்ஊக்கிகளும் சேதமடைந்துள்ளன.
வெள்ளப்பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்பு படையினா் 30 போ், தீயணைப்புத் துறையினா் 170 போ்ஆகியோருடன் காவல் துறையினா், வருவாய் துறையினா், உள்ளாட்சித் துறையினா் மற்றும் பேரிடா் முதல் நிலை மீட்பாளா்களும் ஈடுபட்டு வருகின்றனா். தமிழ்நாடு மாநில பேரிடா் மீட்பு படையினா் 26 போ் தயாா் நிலையில் உள்ளனா். பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் உதவிடும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையை 0462-2501012 தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.