கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!
மாடித்தோட்டத்தில் காய்கறிகள், சமைக்க சாண எரிவாயு; குடிக்க மழைநீர் - சென்னையில் வாவ் வீடு
சென்னை, அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியர் நாகலட்சுமி - பாலாஜி. நாகலட்சுமி, உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். பாலாஜி, பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இயற்கையோடு இயைந்த தற்சார்பு வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இத்தம்பதி… மாடு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு, மாடித்தோட்டம், பயோ காஸ் உற்பத்தி, மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருவதோடு, மாட்டுச் சாணம் மற்றும் மூலிகைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் களைத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். பெருநகரப் பகுதியில், நவநாகரிக வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், இத்தம்பதி இயற்கை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது, பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஒரு காலைப்பொழுதில் நாகலட்சுமி-பாலாஜி தம்பதியின் வீட்டுக்குச் சென்றோம். ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள வீட்டுக்குச் சென்ற உணர்வு ஏற்பட்டது. மாடுகளும் கோழிகளும் ஒருசேர குரல் எழுப்பி, நம்மை வரவேற்றன. மாட்டுச் சாணத்தில் கொசுவிரட்டி, சாம்பிராணி ஆகிய பொருள்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நாகலட்சுமி, மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
``என்னோட சொந்த ஊர் சென்னைதான். எம்.இ பட்டப்படிப்பு முடிச்சிட்டு… பாலிடெக்னிக்ல மூணு வருஷமும், தனியார் பொறியியல் கல்லூரியில உதவிப் பேராசிரியரா 6 வருஷமும் பணியாற்றினேன். என் கணவரோட பூர்வீகம், ராணிப்பேட்டை மாவட்டத்துல உள்ள கிளாம்பாடி. சென்னையில பொறியாளரா பணி யாற்றிக்கிட்டு இருக்கார். அவரோட பணி நிமித்தமா அண்ணாநகர்ல வசிச்சுக்கிட்டு இருக்கோம்.
ஆற்காடு அரிசி திருவிழாவும் கோழி வளர்ப்பும்...
சில வருஷங்களுக்கு முன்னாடி, ஆற்காடு அரிசி திருவிழாவுல கலந்துக்குற வாய்ப்பு யதார்த்தமா அமைஞ்சது. அப்பதான், இயற்கை சார்ந்த விஷயங்கள்ல எனக்கு ஆர்வம் ஏற்பட ஆரம்பிச்சது. என் கணவரோட சொந்த ஊரான கிளாம்பாடியில இருந்து சிறுவிடை ரக நாட்டுக்கோழிகள் வாங்கிக்கிட்டு வந்து வளர்த்துக்கிட்டு இருந்தோம். நாளடைவுல, வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட்டு, 12 கோழிகள் இறந்துடுச்சு. 2 கோழிகள் மட்டும் தப்பி பிழைச்சது. சரி இதையாவது நல்ல ஆரோக்கியமா, நோய் எதிர்ப்பு சக்தியோடு வளர்க்கணும்னு தீர்மானிச்சேன். அதுக்கு என்னதான் வழினு யூடியூப்ல தேடிப் பார்த்தப்பதான், பஞ்சகவ்யாவோட மகத்துவம் பத்தி தெரிய வந்துச்சு. கோழிகளுக்கு பஞ்சகவ்யா கொடுத்தால், நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும்… மாட்டுச் சாணம் மூலம் உருவாகும் புழு, பூச்சிகள் மற்றும் கறையான்களை கோழிகள் சாப்பிட்டா, அதிக அளவு புரதச்சத்து கிடைக்கும்னு சில விவசாயிகள் சொல்லியிருந்தாங்க.
என் மாமியார் வீட்ல இருந்து ஒரு மாடும் கன்றுக்குட்டியும் வாங்கிக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சோம். அதோட சாணம் மற்றும் சிறுநீரைப் பயன்படுத்தி, பஞ்சகவ்யா தயார் பண்ணி கொடுக்க ஆரம்பிச்சதுனாலயும், சாணம் மூலம் உருவாகும் புழு, பூச்சிகளை சாப்பிட்டதுனாலயும் கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தியோடு ஆரோக்கியமா வளர ஆரம்பிச்சது. கால்நடைகளை நல்ல முறையில கவனிச்சிக்கணும்ங்கற நோக்கத்துனால… நான் ஏற்கெனவே தனியார் பொறியியல் கல்லூரியில பணியாற்றிக்கிட்டு இருந்த உதவிப் பேராசிரியர் பணியை ராஜினாமா செஞ்சேன். இப்ப என்கிட்ட, 20 நாட்டுக் கோழிகள், 3 மாடுகள், 2 கன்றுக்குட்டிகளும் இருக்கு.
அனுபவ பாடம்...
ஆரம்பத்துல, சந்தைகள்ல மலிவான விலையில கிடைச்ச பழைய காய்கறிகளை வாங்கிக்கிட்டு வந்து மாடுகளுக்கு கொடுத்துக்கிட்டு இருந்தோம். இது தவறான வழிமுறைனு அப்ப எங்களுக்குத் தெரியாது. செரிமானப் பிரச்னை ஏற்பட்டு, மாடுகள் ரொம்ப சிரமப்பட்டுச்சு. கால்நடை மருத்துவரை எங்க வீட்டுக்கு வரவழைச்சு, மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தோம். `கால்நடைகளுக்கு காய்கறிகள் கொடுத்தால், செரிமானப் பிரச்னை ஏற்படும்… இனிமேலாவது கவனமா இருங்க’னு மிகுந்த கண்டிப்போடு சொன்னார்.
பள்ளி மைதானங்களில்கிடைக்கும் புற்கள்...
மாடுகள் ஆரோக்கியமா வளர, அடர் தீவனமும் பசுந்தீவனமும் அவசியம். அடர் தீவன தேவைக்கு தவிடும் புண்ணாக்கும் கொடுக்குறோம். சென்னையில பசுந்தீவனம் கிடைக்குறது ரொம்ப சிரமம். அப்படியே கிடைச்சாலும் விலை ரொம்ப அதிகம். அந்தளவுக்கு செலவு பண்ணினா, கட்டுப்படியாகாது… வேற என்னதான் வழினு யோசிச்சப்பதான், எங்க பகுதியில உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் மைதானங்கள்ல மண்டிக் கிடக்கும் புற்கள் நினைவுக்கு வந்துச்சு. முறையான அனுமதி யோடு, இலவசமா வெட்டி எடுத்துக்கிட்டு வந்து, எங்க மாடுகளுக்குப் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம்.
அசோலா வளர்ப்பு...
கால்நடைகளுக்கு மிகச் சிறந்த உணவு, அசோலா, எங்க வீட்டு மாடியில கடந்த மூணு வருஷமா அசோலா உற்பத்தி பண்ணிக்கிட்டு இருக்கோம். வாரத்துக்கு குறைந்தபட்சம் 3 கிலோ கிடைக்குது. அதை மாடுகளுக்கும் நாட்டுக்கோழிகளுக்கும் கொடுத்துக்கிட்டு இருக்கோம்.
சாண எரிவாயு...
மாட்டுச் சாணத்துல இருந்து மீத்தேன் வாயுவை சேகரிச்சு, வீட்டு சமையலுக்குப் பயன்படுத்தலாம்னு முடிவெடுத்தோம். அதுக்கான கோபர் காஸ் கலன் அமைக்க, சில நிறுவனங்களை அணுகினோம். 2 லட்சம் ரூபாய்க்கு மேல செலவாகும்னு சொன்னாங்க. என்னோட கணவர் சிவில் இன்ஜினீயர்ங்கற துனால, அவரே அதை வடிவமைச்சு, குறைஞ்ச செலவுல கட்டிட்டார். தினந்தோறும், எங்க வீட்ல 3 மூணு வேளையும் கோபர் காஸ்லதான் சமையல் நடக்குது. கழிவுப் பொருளா மிஞ்சக்கூடிய மாட்டுச்சாண சிலேரி, நல்ல சத்தான உரம். ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விற்பனை பண்ணிக்கிட்டு இருக்கோம். விற்பனை செஞ்சதுபோக, மிச்சமிருக்கும் சிலேரியை, பயனுள்ள வகையில உபயோகப்படுத்தணும்ங்கற நோக்கத்தோடு, மாடித்தோட்டம் அமைச்சு, செடிகளுக்குப் பயன்படுத்த தீர்மானிச்சோம்.
மாடித்தோட்டம்...
ரசாயன நச்சுத்தன்மை இல்லாத, நல்ல சத்தான காய்கறிகளை, வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டத்துல உற்பத்தி செஞ்சு சாப்பிடுறதுங்கறது காலத்தின் கட்டாயம். 5 தொட்டியில ஆரம்பிச்சோம். இப்ப 50-க்கும் மேற்பட்ட தொட்டிகள்ல… இலவம்பாடி முள் கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கோவைக்காய், முள்ளங்கி, சுண்டை உள்ளிட்ட காய்கறிச் செடிகளும்… பசலி, பொன்னாங்கண்ணி உள்ளிட்ட கீரை வகைகளும்… லெமன் கிராஸ், கீழாநெல்லி, குப்பை மேனி, நொச்சி, ஆடாதொடை, துளசி, மரிக்கொழுந்து, வெட்டி வேர் உள்ளிட்ட மூலிகை செடிகளும் செழிப்பா வளர்ந்து பலன் கொடுத்துக்கிட்டு இருக்கு.
மழைநீர் சேகரிப்பு...
மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியிருக்கோம். குடிநீர் மற்றும் சமையலுக்கு பெரும்பாலும் மழைநீர்தான் பயன்படுத்துறோம். பற்றாக்குறை காலங்கள்ல மட்டும்தான் நிலத்தடிநீர் பயன்படுத்துறோம்.
எங்கள் வீட்டில் பிரிட்ஜ் கிடையாது...
எங்க வீட்ல வளர்க்குற மாடுகள் மூலம், தினமும் 10 - 12 லிட்டர் பால் கிடைக்குது. எங்க தேவைக்குப் போக மீதியுள்ள பாலை, அக்கம்பக்கத்து வீடுகளுக்கு விற்பனை பண்ணிடுவோம். ஒரு லிட்டர் 80 ரூபாய்னு விற்பனை செய்றோம். எங்க வீட்ல பிரிட்ஜ் கிடையாது. சில நாள்கள், தவிர்க்க முடியாத காரணங்களால் மிஞ்சக்கூடிய பாலை, பனீரா மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சுடுவோம்.
வறட்டி, சாம்பிராணி, மூலிகை கொசுவிரட்டி
எங்க வீட்ல வளர்க்குற மாடுகள் மூலம் நிறைய சாணம் கிடைக்குது. அதுல ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும்தான் கோபர் காஸ் உற்பத்திக்கு பயன்படுத்துறோம். மீதியுள்ள சாணத்துல வறட்டி, சாம்பிராணி, மூலிகை கொசுவிரட்டி உள்ளிட்ட பொருள்கள் தயார் பண்ணி விற்பனை செய்றோம். வறட்டிக்கு அதிக வரவேற்பு இருக்கு.
கோயில்கள்ல நடத்தப்படும் யாகம், வீட்டு கிரகப்பிரவேசம் மற்றும் திருமணத்துல நடத்தப்படும் யாகங்களுக்கும் வறட்டி வாங்குறாங்க. ஒரு வறட்டி 7 ரூபாய்னு விற்பனை செய்றோம். சாணத்தோடு 108 ஓம திரவியப் பொடிகள் கலந்து சாம்பிராணி தயார் செய்றோம். ஒரு சாம்பிராணி வில்லை 7 ரூபாய்னு விற்பனை செய்றோம்.
சாணத்தோடு… நொச்சி, வேம்பு, துளசி, லெமன்கிராஸ், பேய்விரட்டி, தும்பை உள்ளிட்ட மூலிகை இலைகள் மற்றும் இலுப்பை எண்ணெய் கலந்து மூலிகை கொசுவிரட்டி தயார் பண்ணி விற்பனை செய்றோம். அதுவும் 7 ரூபாய்தான்.
மூலிகை சோப்பு வகைகள்...
குப்பைமேனி, வேப்பிலை, வெட்பாலை, ஆவாரம்பூ, செம்பருத்தி ஆகிய மூலிகைகள்ல 5 வகையான சோப்புகள் தயார் பண்ணி விற்பனை செய்றோம், இவை தவிர, நலங்கு மாவு சோப்பு, மூலிகை கூந்தல் தைலம், பற்பொடி, பாத்திரம் கழுவும் திரவம், தரை சுத்தம் செய்யும் திரவம் உள்ளிட்ட பொருள்களும் தயார் செய்றோம்.
நாட்டுக்கோழி வளர்ப்பு...
20 நாட்டுக்கோழிகள் வளர்க்குறதுனால, வருஷம் முழுக்க எங்க வீட்டுத் தேவைக்கான முட்டைகள் கிடைக்குது. எங்க தேவைக்குப் போக மீதமுள்ள முட்டைகளை வெளியில விற்பனை செய்றோம். ஒரு முட்டையின் விலை 20 ரூபாய். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகளை அடை காக்க வச்சு, குஞ்சுகளும் உற்பத்தி பண்ணி, அதை சில மாதங்கள் வரைக்கும் வளர்ப்போம். பெட்டைக் கோழிகளா இருந்தால் நாங்களே வச்சுக்குவோம். சேவலா இருந்தா, ஒரு கிலோ உயிர் எடை 500 ரூபாய்னு விற்பனை பண்ணிடுவோம்.
வருமானம்...
இயற்கையோடு இயைந்த, தற்சார்பு வாழ்க்கை வாழணும்ங்கற நோக்கத்துலதான் கால்நடைகள் வளர்ப்பு, மாடித்தோட்டம், கோபர் காஸ் உற்பத்தி உள்ளிட்டவையில ஈடுபட ஆரம்பிச்சோம். இவை மூலமா, கணிசமான வருமானம் பார்க்க முடியும்னு நாங்க கொஞ்சம்கூட எதிர்பார்க்கல.
பால், பனீர், முட்டை, சேவல், கோபர் காஸ் சிலேரி, வறட்டி, சாம்பிராணி, மூலிகை கொசு விரட்டி, மூலிகை சோப்பு உள்ளிட்ட இன்னும் பல வகையான பொருள்கள் விற்பனை மூலம், ஒரு மாசத்துக்கு, எல்லா செலவுகளும் போக 30,000 ரூபாய் லாபம் கிடைக்குது. இயற்கையோடு இயைந்த தற்சார்பு வாழ்க்கை மூலம், ஆரோக்கியமாவும் மகிழ்ச்சியாவும் வாழ்றோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்புக்கு: நாகலட்சுமி,
செல்போன்: 97104 52979
சுகாதாரத்தில் அதிக கவனம்...
எந்தவித எதிர்ப்பும் இல்லை...
``நாங்க, கால்நடைகள் வளர்க்குறதுனால, அக்கம் பக்கத்து வீடுகள்ல வசிக்குற மக்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் ஏற்படக் கூடாதுங்கறதுல, ரொம்ப கவனமா இருக்கோம். இது அரை கிரவுண்டு இடம். வீட்டுக்கு பின்புறத்துல மூணு மாட்டையும் கட்டி பராமரிக்கிறோம். கோழிகள் காலி இடங்கள்ல மேயும். தோட்டத்த வீட்டு மாடியில வெச்சு பராமரிக்கிறோம். எப்போதும் இடத்தை சுத்தமா வெச்சுக்கிறோம். அதனால, ஈ, கொசு தொந்தரவுகள் ஏற்படுறதில்ல. பொது இடங்களுக்கு மாடுகள அனுப்புறதில்ல. அதேசமயம், மாடுகள் மற்றும் கோழிகளோட எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கூடாதுங்கறதுலயும் உறுதியா இருக்கோம். அக்கம் பக்கத்துல இருக்குறவங்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாததுனால, இந்தப் பகுதி மக்கள் எங்களுக்கு உறுதுணையா இருக்காங்க” எனத் தெரிவித்தார்.
- சி.ஶ்ரீகாந்த்