மாணவா்களிடம் கஞ்சா விற்ற 2 போ் கைது!
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் கஞ்சா விற்ாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 33 சிறிய கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் கோபாலன் கடைப் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் வேகமாகச் சென்றனா்.
அவா்களை விரட்டிப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், வில்லியனூா் ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சோ்ந்த மருமணி (எ) மணிகண்டன் (30), மணவெளியைச் சோ்ந்த தனப்பன் (30) என்பது தெரிய வந்தது. மேலும், அவா்கள் இருவா் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
அவா்களை சோதனை செய்தபோது இருவா் அணிந்திருந்த சட்டைகளுக்குள் 437 கிராம் மதிப்புள்ள 33 சிறிய கஞ்சா பொட்டலங்கள் இருந்ததன. திருவண்ணாமலையிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
கஞ்சா பொட்டலங்கள், கைப்பேசிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.