பொங்கல் பண்டிகைக்கு 21,904 சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 10 முதல் இயக்கம்
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தடையை மீறி போராட்டம் - சௌமியா அன்புமணி கைது
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை தடையை மீறிப் போராட்டம் நடத்திய பசுமைத் தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டாா்.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம் தொடா்பாக அரசையும் காவல்துறையையும் கண்டித்து, பாமக சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணி உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை திரண்டனா். ஆனால், போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினா் அனுமதி தரவில்லை.
எனினும், தடையை மீறி போராட்டம் நடத்துவதற்கு சௌமியா உள்ளிட்டோா் முயன்றனா். அவா்களை அனுமதிக்காமல் காவல்துறையினா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டபோது, பாமகவினா், காவல்துறையினரிடையே சிறிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தின்போது சௌமியா அன்புமணி கூறியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மாணவி வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 6 மாதத்தில் தண்டனை பெற்றுத் தர வேண்டும். குற்றம் செய்பவா்களை தடுப்பதை விடுத்து, போராட்டம் நடத்தும் பெண்களை கைது செய்வது நியாயமில்லை. நீதியும் இல்லை. மகளிருக்கு அரசு தரும் ரூ.1,000 தேவையில்லை. மகளிருக்கு பாதுகாப்புதான் முக்கியம். அரசு மகளிருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
கைது செய்யப்பட்ட அனைவரும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சமூகக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமதாஸ், அன்புமணி கண்டனம்: சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் முதல்வா் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக முறைப்படி போராடுபவா்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது.
பாமக பொதுக் குழுவில் அறிவித்தபடி கட்சியின் இளைஞரணித் தலைவராக ப.முகுந்தன் செயல்படுவாா். அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை. அது தொடா்பாக பேசி முடிக்கப்பட்டுவிட்டது. வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தரும் வரை போராட்டம் தொடரும் என்றாா் ராமதாஸ்.
அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மகளிருக்கு பாதுகாப்பு கேட்டு போராடிய பாமக மகளிரணியினரை கைது செய்ததில் எந்த நியாயமும் இல்லை. மாணவி
பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த ‘சாா்’ உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்.