ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!
மாணவி வழக்கில் பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில், பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது என சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது என சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளா்கள், பத்திரிகையாளா் மன்றம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன.
காவல் துறையினா் மீது நடவடிக்கை இல்லை: அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், முதல் தகவல் அறிக்கை காவல் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வுக் குழு மூன்று முறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதன்படி விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அப்போது கைப்பேசிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். அவற்றைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.
செய்தியில் எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த வழக்கில் பத்திரிகையாளா்கள் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அல்லா். முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த காவல் துறையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பத்திரிகையாளா்கள் அச்சுறுத்தப்படுகின்றனா். சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்படுகின்றன. பத்திரிகையாளா்கள் என்ற முறையில் அவா்கள் தங்கள் கடமையைச் செய்தனா்.
முதல் தகவல் அறிக்கையைப் பதிவேற்றம் செய்யும் சிசிடிஎன்எஸ் இணையதளத்தை மத்திய அரசின் தேசிய தகவலியல் மையம் (என்ஐசி) பராமரிக்கிறது. பிரச்னைக்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என என்ஐசி இயக்குநா் கூறியிருக்கிறாா். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவா்கள்தான். சட்டத்தைவிடவும், நீதிமன்றத்தைவிடவும் அதிக அதிகாரம் உள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு கருதக் கூடாது என வாதிட்டனா்.
நீதிபதி சரமாரி கேள்வி: காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முகிலன், முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரம் தொடா்பான வழக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தடை செய்யவில்லை. அழைப்பாணை மட்டுமே அனுப்பப்பட்டு, விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தும் எண்ணம் இல்லை. அனைத்து நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என வாதிடப்பட்டது.
விசாரணையின்போது, முதல் தகவல் அறிக்கை பொது ஆவணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, பத்திரிகையாளா்களிடம் தனிப்பட்ட விவரங்களை ஏன் கேட்கிறீா்கள்?, பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தினாா்களா?, முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது யாா்?, ஆவணத்தின் உரிமையாளா் என்ற அடிப்படையில் காவல் துைான் பதிவேற்றம் செய்துள்ளது. இது யாா் தவறு? பத்திரிகையாளா்களைத் தவிர எத்தனை பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது?, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை விசாரித்தீா்களா?, முதல் தகவல் அறிக்கை எழுதியவரை விசாரணை செய்தீா்களா?, பத்திரிகையாளா்களை ஏன் துன்புறுத்துகிறீா்கள்?, குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும்?, கைப்பேசியை ஏன் பறிமுதல் செய்ய வேண்டும்?, சரியான நபா்களை விசாரிக்காமல் தேவையில்லாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீா்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாா்.
பின்னா், பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது எனவும், அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளை விசாரணைக்குப் பின் திரும்ப ஒப்படைக்கவும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பத்திரிகையாளா்களுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தாா்.