சிசுவின் உடலைக் கடித்துத் தின்ற நாய்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்!
மாத்தூர் தொட்டில் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைப்பு; போலீஸ் விசாரணை!
கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சியில் மாத்தூர் பகுதியில் தொட்டில் பாலம் அமைந்துள்ளது. ஒருபுறம் அருவிக்கரை ஊராட்சியையும் மறுபுறம் வேர்கிளம்பி பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் மாத்தூர் தொட்டில் பாலம் அமைந்துள்ளது. பட்டணம் கால்வாய் அமைக்கும்போது பரளி ஆறு குறுக்கிட்டதால் அந்த ஆற்றின் மீது சுமார் 108 அடி உயரத்தில் சுமார் 1240 அடி நீளத்தில் தொட்டில் பாலம் அமைக்கப்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/kjdw4voe/IMG1739327723127-1.jpg)
ஆறும் அதை ஒட்டி நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவிலேயே அதிக உயரம்கொண்ட தொட்டில் பாலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவு மாத்தூர் தொட்டில் பாலத்துக்கு வந்து செல்கின்றனர். மாத்தூர் தொட்டில் பாலத்தின் நுழைவுப்பகுதியில் காமராஜர் உருவப்படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பகுதி வழியாக சென்ற சிலர் காமராஜர் கல்வெட்டு உடைந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-10-26/7qo2smx3/mathoor-aqueduct-16561423663377538213fac1636c68.jpg)
இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு சென்று மறியல் போராட்டம் நடத்தினர். காமராஜர் கல்வெட்டை உடைத்த குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், உடைக்கப்பட்ட கல்வெட்டு அமைந்திருந்த இடத்தில் மீண்டும் கல்வெட்டை அமைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்குமாவட்ட தலைவர் பினுலால் சிங் தெரிவித்தார். போலீஸார் அங்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை 2 நாள்களில் கண்டுபிடிப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட், கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் ஆகியோரும் கல்வெட்டு உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/d2vrbac1/IMG1739335393867.jpg)
இந்தச் சம்பவம் குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் திருவட்டாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது வேண்டும் என்றே உடைத்தனரா அல்லது மதுபோதையில் காரில் சென்றவர்கள் மோதினார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.