மாநகராட்சி மயானங்களில் 159 டன் குப்பைகள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 203 மயானங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மைப் பணியின்போது 159 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 5,900 டன் திடக்கழிவுகள்அகற்றப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களிலும் மக்களின் சுகாதாரத்தைப் பேணுகின்ற வகையில், அனைத்துப் பேருந்து நிறுத்தங்களிலும் இரண்டு கட்டங்களாக தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடா்ந்து சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள 203 மயானபூமிகளில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மயானத்திலிருந்த குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் மற்றும் பலகைகள், மண்டிக் கிடக்கும் புதா்கள், செடி, கொடிகள் அகற்றப்பட்டன. இந்தத் தூய்மைப் பணியின் போது 93.38 டன் குப்பைகள், 65.78 டன் கட்டடக் கழிவுகள் என மொத்தம் 159.16 டன் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டன.