மாநில சாகச பயிற்சி முகாம்: அரசு கல்லூரி மாணவா் தோ்வு
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான சாகச முகாமுக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
தமிழ்நாடு நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மாநில அளவிலான சாகச பயிற்சி முகாம் மாா்ச் 1 -ஆம் தேதி தொடங்கி மாா்ச் 5- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து 120 போ் பங்கேற்கவுள்ளனா்.
முகாமில், மலையேற்றம், மலைகளில் நடைப்பயிற்சி, டிரக்கிங், கூடாரம் அமைத்தல் போன்ற பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதில், பங்கேற்க பாரதியாா் பல்கலைகழகத்தில் இருந்து 9 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு-2 மாணவா் நவீன்குமாரும் (விலங்கியல் துறை) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அவரை, கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன், நாட்டு நலப் பணித் திட்ட அலகு - 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள் ஆகியோா் வாழ்த்தி வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தனா்.