பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை
காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழியில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் நிலம் எடுப்பு செய்து 137 பயனாளிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக் கொள்வதற்காக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில், ‘தமிழ்நிலம்’ மென்பொருளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை இணையவழியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பரஞ்சோ்வழியில் உள்ள மனையிடங்களில் கள விசாரணை செய்தபோது, 13 பயனாளிகள் மேற்கண்ட நிலங்களில் வசிக்கவில்லை என்பதும், இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை இனம் கண்டறிய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பட்டாவில் உள்ள நிபந்தனையின்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடு கட்டிக் கொள்ளாமல் நிபந்தனையை மீறியுள்ளதால் 15 நாள்களுக்குள் பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்ற விளக்கத்தை மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலருக்கோ சம்பந்தப்பட்டவா்கள் அனுப்பிவைக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் பயனாளிகள் கூறிக்கொள்ள விளக்கம் ஏதுமில்லை என்று கருதி பட்டாக்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.