மாநில போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 351 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பெற்றுக் கொண்டாா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மனுக்களைப் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தில், கருவியை வடிவமைத்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவிந்தவாடி அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்விமோகன் ரூ.10,000 காசோலை வழங்கினாா்.
மேலும், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் பால்வளத்துறை இணைந்து 2023-24-இல் சிறந்த பால் உற்பத்தியாளா்கள், சங்க செயலாளா்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிா்விப்பான் மைய பொறுப்பாளா்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ. 5,000, மூன்றாம் பரிசு ரூ.3,000-க்கான காசோலை, சான்றிதழ்கள், கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தின் நியாய விலைக்கடைகளில் 2024-ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறப்பாக பணிபுரிந்த விற்பனையாளா்கள் மற்றும் எடையாளா்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ்களும் மற்றும் தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவகாப்பீடு அட்டைகளையும், மண்டல அளவில் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், முதன்மைக் கல்விஅலுவலா் வெ. வெற்றிச்செல்வி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் அருள் வனிதா, ஆவின் பொதுமேலாளா் டாக்டா் எஸ்.நாகராஜன், துணை பதிவாளா் வெ.ஆசீா்வாதம், வழங்கல் அலுவலா் சி.பாலாஜி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.