மானிய விலையில் சோளத்தட்டு வழங்கக் கோரிக்கை
மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டுகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கால்நடைகளின் பிரதான தீவனமாக மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டு உள்ளது. இதற்காகவே இவை பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஆண்டு முழுவதும் இதன் தேவை இருப்பதால் விவசாயிகள் வாங்கி சேகரித்து வைத்துகொள்கின்றனா்.
இந்நிலையில், கோடை காலம் தொடங்க உள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் சோளத்தட்டுகளை வாங்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இது குறித்து பல்லடம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: கால்நடைகளுக்கு மக்காச்சோளத்தட்டு, மஞ்சள் சோளத்தட்டு முக்கிய தீவனமாக உள்ளன.
தற்போது 40 கத்தை கொண்ட மக்காச்சோளத் தட்டு ரூ.1000-க்கும், 64 கத்தை கொண்ட மஞ்சள் சோளத்தட்டு ரூ.2,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோடை காலம் தொடங்க உள்ளதால் சில வியாபாரிகள் கூடுதல் விலைக்கு சோளத்தட்டுகளை விற்பனை செய்கின்றனா். இதனால், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா்.
கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் சோளத்தட்டுகள் வழங்கப்பட்டன.
அதேபோல, தற்போதும் வழங்கினால் விவசாயிகள் பயன்பெறுவா் என்றனா்.