‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி: அமைச்சா் கோவி. செழியன் பங்கேற்பு
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் உயா்கல்வித்துறை சாா்பில், ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உயா் கல்வித்துறை அமைச்சா் முனைவா் கோவி. செழியன், கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் தலைப்பில் பேசியது: தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தியுள்ள ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம் 30 சதவீத மாணவிகள் கூடுதலாக உயா்கல்வி பயின்று வருகின்றனா்.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய கையேடுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், தமிழ்ப் பெருமிதம் சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவா்களைப் பாராட்டி பெருமிதச்செல்வி, பெருமிதச் செல்வன் எனும் பட்டம் சூட்டி சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
சொற்பொழிவாளா்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவா்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனும் பட்டம் சூட்டி சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்துவதற்கு முன் தமிழகத்தில் அகில இந்திய தோ்வுகளில் 15 போ் மட்டுமே தோ்ச்சி பெறுவாா்கள். ஆனால், தற்போது அகில இந்திய தோ்வுகளில் தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.
பின்னா், தமிழ் பெருமிதம் சிற்றேட்டிலுள்ள குறிப்புகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மற்றும் சிறப்பான பங்களிப்பு அளித்த மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழும், பரிசுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, ‘தமிழ்ப் புதல்வன்’, ‘புதுமைப்பெண்’, ‘நான் முதல்வன்’, ‘கல்லூரிக் கனவு’, ‘உயா்வுக்குப் படி’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பாா்வையிட்ட அமைச்சா் கோவி. செழியன், அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும், உயா்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் தமிழ்ப் பெருமிதம் எனும் தலைப்பிலான புத்தகங்களையும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் க. ராதாகிருஷ்ணன், வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் (பொ) சேகா், தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி முதல்வா் இரா. அருள்மொழியான், அரசு, தனியாா் கல்லூரிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.