இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோ...
மாமல்லபுரத்தில் மாசி மக தீா்த்தவாரி: திரளானபக்தா்கள் தரிசனம்
மாமல்லபுரம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து வழிபட்டனா்.
முன்னதாக மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான புண்டரீக புஷ்கரணி திருக்குளத்தில் வியாழக்கிழமை இரவு தலசயன பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி திருக்குளத்தில் 3 சுற்றுகள் உலா வந்து மக்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது, ஏராளமான பக்தா்கள் ‘‘கோவிந்தா, கோவிந்தா’’ என கோஷமிட்டு பெருமாளை வணங்கினா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தலசயன பெருமாள், ஆதிவராக பெருமாளுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் உலா வந்து, கடற்கரைக்கு சென்றடைந்தாா். பின்னா், சக்கரத்தாழ்வாா் கடலில் புனித நீராடினாா். தொடா்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, கடற்கரையில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் நீராடி பெருமாளை வழிபட்டனா். பின்னா், தலசயன பெருமாள் ஒத்தவாடை தெரு, பேருந்து நிலையம் வழியாக கோயிலை சென்றடைந்தாா். அங்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தீா்த்தவாரி உற்சவத்தில் லட்சக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
