2-வது மொழியே கற்பிக்காத நிலையில் 3-வது மொழி வேறு: ப. சிதம்பரம் விமர்சனம்
இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோலி பதில்!
இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்த தோல்வியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பினையும் இந்திய அணி இழந்தது.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. கிரிக்கெட் தொடருக்கான சுற்றுப்பயணங்களின்போது, அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே வீரர்களுடன் தங்கியிருக்க முடியும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: டபிள்யூபிஎல்: 3-ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி..! பயிற்சியாளர் கூறியதென்ன?
45 நாள்களுக்கும் மேலாக நடைபெறும் தொடரில் குடும்ப உறுப்பினர்கள் 14 நாள்கள் வரை வீரர்களுடன் தங்கியிருக்கலாம். சிறிய தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வீரர்களுடன், அவரின் மனைவி அல்லது பெண் தோழிகள் ஒருவாரத்துக்கு தங்கியிருக்கலாம்.
விராட் கோலி கூறியதென்ன?
வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்க பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்குவது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: குடும்பங்களின் பங்களிப்பை அனைவருக்கும் புரிய வைப்பது மிகவும் கடினம். வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பினை பலரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். போட்டியில் சிறப்பாக செயல்படாத பட்சத்தில், என்னுடைய ஹோட்டல் அறைக்குச் சென்று தனியாக சோகமாக அமர்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. நான் இயல்பாக இருக்க வேண்டியிருக்கிறது.
இதையும் படிக்க: முதல் டி20: 10 ஓவர்களில் நியூசி. அபார வெற்றி!
குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதை மேலோட்டமாக நான் கூறவில்லை. உங்களது பொறுப்பினை சரியாக செய்து முடித்துவிட்டு, குடும்பத்துடன் இயல்பாக பேசி மகிழ்ந்தால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்காது. குடும்பத்துடன் நேரத்தினை செலவிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை கொடுக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட நான் தவறுவதில்லை என்றார்.
அண்மையில் துபையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்போது, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் துபையில் தங்கியிருந்தார்கள். ஆனால், அவர்கள் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டலில் தங்கவில்லை.
இதையும் படிக்க: இன்று ஐஎம்எல் கிரிக்கெட் லீக் இறுதி ஆட்டம்: இந்தியா-மே.இந்திய தீவுகள் மோதல்
கிரிக்கெட் தொடர்களின்போது, வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கான செலவினை சம்பந்தப்பட்ட வீரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.