மாறிய சாட்டை, வேடிக்கை பார்த்த நிர்வாகிகள்... அண்ணாமலை சாட்டையடி நிகழ்வு.. நடந்தது என்ன?
“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், திமுகவை கண்டித்து எனக்கு நானே சாட்டையடி கொடுத்துக் கொள்ளப் போகிறேன்.” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று கூறியிருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், “திட்டமிட்டபடி சாட்டையடி நிகழ்வு நடைபெறும்.” என்று அண்ணாமலை கூறினார். அதன்படி, கோவை காளப்பட்டியில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு காலை 10 மணியளவில் சாட்டையடி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதற்காக காலை 8.30 மணியளவில் இருந்தே அண்ணாமலையின் வீட்டுக்கு நிர்வாகிகள் வரத்தொடங்கினார்கள். அண்ணாமலையின் வீட்டுக்குள் முதலில் ஊடகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அண்ணாமலைக்கும், ஊடகத்தினருக்கும் இடையே பேரிகார்டு வைக்கப்பட்டது. ஊடகங்களுக்கு பின்னால் நிர்வாகிகளுக்கு நிற்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டது.
சரியாக 9.55 மணிக்கு அண்ணாமலை பச்சை வேட்டையுடன், சட்டை அணியாமல் வெளியில் வந்தார். நிர்வாகிகள் புதிய தடிமனான கோயில் சாட்டையை வாங்கி வந்திருந்தனர். நிர்வாகிகள் கொண்டு வந்த தடிமனான சாட்டைக்கு பதிலாக வெள்ளை நிறத்தில் சற்று லேசான சாட்டை அண்ணாமலை கையில் கொடுக்கப்பட்டது.
முகத்தை மிகவும் இறுக்கமாக வைத்துக் கொண்டு அண்ணாமலை சாட்டையை சுழற்றி தன்னை தானே அடிக்கத் தொடங்கினார். மொத்தம் 8 முறை சாட்டையை சுழற்றினார். அதில் 6 முறை அண்ணாமலையின் உடலில் பட்டது. 2 முறை சாட்டை கழுத்தில் சுற்றிக் கொண்டது. ஒரு நிமிடத்துக்குள் அந்த நிகழ்வு முடிந்துவிட்டது.
ஒரு சில பெண் நிர்வாகிகள் மட்டும், “வேண்டாம்.. வேண்டாம்” என்றும், “திமுக ஒழிக” என்றும் கோஷம் எழுப்பினர். அண்ணாமலையின் அருகே நின்று கொண்டிருந்த முக்கிய நிர்வாகிகள் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. சிலர் ஹாயாக சிரித்துபடி வேடிக்கை பார்த்தனர். 6 முறை அடித்துக் கொண்ட பிறகு கோவை பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் நந்தகுமார் என்பவர் போதும் என்பது போல அண்ணாமலையை கட்டியணைத்து தடுத்தார்.
மாநிலத் தலைவர் சாட்டையில் அடித்துக் கொள்கிறார் என்றதும் நேற்று பாஜகவினர் பலரும், “ வேண்டாம்” என்று பொங்கினர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு தொண்டர்கள் வருவார்கள், அண்ணாமலை சாட்டையில் அடித்துக் கொள்வதை தடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை.
அண்ணாமலை வீட்டுக்கு முக்கிய நிர்வாகிகள் மட்டும் சுமார் 50 பேர் வருகை புரிந்திருந்தார்கள். அவர்களையும் பேரிகார்டு மூலம் தடுத்துவிட்டார்கள். ஒரு சில நிர்வாகிகள் கையில் சாட்டையுடனும் வந்திருந்தனர். “அண்ணாமலை வேண்டாம்” என்று நேற்று சமூகவலைதள பக்கத்தில் பதிவு போட்ட பாஜக பொருளாளர் எஸ்ஆர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகளும் நேரில் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.