மாற்றுத் திறனாளிகளின் விவரம் சேகரிக்கும் பணி தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் இல்லம் தேடிச் சென்று அவா்களது விவரங்களை சேகரிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நலத் திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டப்படி, இல்லம் தேடிச் சென்று மாற்றுத் திறனாளிகளின் விவரங்களைச் சேகரிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முன்களப் பணியாளா்கள் இந்தப் பணிகளை மேற்கொள்வா். சேகரிக்கப்படும் விவரங்களைக் கொண்டு சமூக தரவு தளம் உருவாக்கப்படும். எனவே, இந்தப் பணிக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.