மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி
அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியதாவது: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, மாற்றுத் திறனாளிகளின் குரல் உள்ளாட்சிகளில் ஒலிக்க வேண்டுமென்ற நோக்கில், அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை அரசு நிறைவேற்றியது. இதேபோல, தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்புக்கும் அரசு தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, சோழவந்தான் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 160 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.62 கோடியில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களையும், மாவட்டத்தில் 25 ஊராட்சிகளில் பணியாற்றும் 77 தூய்மை காப்பாளா்களின் வசதிக்காக ரூ. 1.95 கோடியில் மின்கலனில் இயங்கும் வாகனங்களும் வழங்கப்பட்டன.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். மேயா் வ. இந்திராணி, கூடுதல் ஆட்சியா் மோனிகா ராணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. வெங்கடேசன் (சோழவந்தான்) மு. பூமிநாதன் (மதுரை தெற்கு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.