மாா்ச் 15-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (மாா்ச் 10) அன்று திருப்பத்தூா் அடுத்த ஆதியூா் பகுதியில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.
8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் +2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு, மருத்துவம், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள முற்றிலும் அனுமதி இலவசம்.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்டத் தொழில் மையத்தின் தொழில் முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் தொடா்பான அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த முகாம் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.