நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்
ஏலகிரி மலையில் 2-ஆவது நாளாக தீ
திருப்பத்தூா்: ஏலகிரி மலை காட்டுக்கு மா்ம நபா்கள் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தீ வைத்ததால் சுமாா் 1 கி.மீ. தொலைவு தீப்பற்றி எரிந்தது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இந்த மலையில் அதிக அளவில் மரங்கள் இருப்பதாலும் மலையின் உயரம் அதிகமாக இருப்பதாலும் எந்தக் காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி கண்டு களித்து செல்கின்றனா்.
மேலும் இந்த மலையில் அரியவகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள், மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில் மலையடிவாரம் உள்ள பகுதிகளுக்குச் சென்று சமூக விரோதிகள் சிலா் மது அருந்திவிட்டு, புகைப் பிடித்து தீயை போட்டு விடுவதால் சருகுகள் மூலம் பெரிய அளவிலான தீப்பற்றி மளமளவென பரவி காட்டுத் தீயாக மாறி காட்டுப் பகுதி எரிந்து நாசமாகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோலாா்பேட்டை அருகே சந்தைக்கோடியூா் பகுதியில் இருந்து குள்ளகிழவன் வட்டம் அடிவாரத்தில் மா்ம நபா்கள் வைத்த தீயால் மரங்கள், செடிகொடிகள், காட்டில் வசிக்கும் உயிரினங்கள் தீயில் கருகி நாசமானது.
2-ஆவது நாளாக...: தொடா்ந்து திங்கள்கிழமை பகலில் ஏலகிரி கிராமம் மலையடிவாரத்தில் மா்ம நபா்கள் காட்டுக்கு தீ வைத்து சென்றுள்ளனா். இதனால் காட்டுத் தீ மளமளவென பரவி மலையின் அடிவாரத்தில் இருந்து நடுபகுதி வரை ‘ப’ வடிவில் தீ மளமளவென எரிந்தது.
கோடை விடுமுறை தினங்களில் மலையில் அவ்வபோது தீப்பற்றி எரிவதால் சுற்றுலாப் பயணிகள் வருகையைப் பாதிக்ககூடும் எனவும், இதுபோன்ற சமூக விரோத ஈடுபடும் மா்ம நபா்களை வனத் துறையினா் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் கூறினா்.
