மினிலாரிகள் கூடுதல் தொலைவு சுற்றி வருவதால் கனிமவளப் பொருள்களின் விலை அதிகரிப்பு
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே வலியாற்றுமுகம் பகுதிகளிலுள்ள கல்குவாரிகளிலிருந்து குலசேகரம் பகுதிகளுக்கு மினிலாரிகளில் வழக்கமான பாதையில் கனிம வள பொருள்கள் எடுத்து வர போலீஸாா் அனுமதிக்காததால் கட்டுமானப் பொருள்களின் விலை அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளளனா்.
வலியாற்றுமுகம் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் உள்ளன. இந்தக் குவாரிகளிலிருந்து மினி லாரிகள், குலசேகரம் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகளுக்கு கனிம வளப் பொருள்களை அண்டூா், வெண்டலிகோடு வழியாக எடுத்துச் சென்று வந்தன. வலியாற்றுமுகத்திலிருந்து குலசேகரத்திற்கு 5 கி.மீ. தொலைவு மட்டுமே உள்ளது.
போலீஸாா் அனுமதி மறுப்பு: இந்நிலையில் வலியாற்றுமுகம் பகுதியிலுள்ள கல்குவாரிகளிலிருந்து கனிம வளப் பொருள்களை ஏற்றிச் செல்லும் மினிலாரிகள் அண்டூா், வெண்டலிகோடு வழியாக குலசேகரம் செல்வதற்கு போலீஸாா் தற்போது அனுமதி மறுத்துள்ளனா். அத்துடன், சித்திரங்கோட்டிலுள்ள எடை மேடையில் எடை பதிவு செய்து விட்டு மணலிக்கரை, வோ்க்கிளம்பி, ஆற்றூா், திருவட்டாறு வழியாக குலசேகரம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனா். இதனால் மினிலாரிகள் கூடுதலாக 10 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் 1 யூனிட் கனிம வளப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் கால விரயமும் ஏற்படுகிறது.
இது குறித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் டாக்டா் பினுலால் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குலசேகரம் பகுதிகளுக்கு 1 யூனிட் கனிம வளம் ஏற்றி வரும் மினிலாரிகள் சித்திரங்கோடு பகுதியில் உள்ள எடைமேடையில் எடை பதிவு செய்து விட்டு குலசேகரத்திற்கு வருவது நடைமுறையாக இருந்தது. ஆனால் கடந்த 20 ஆம் தேதிமுதல் காவல் துறை அறிவுறுத்தல் பேரில் இந்த வாகனங்கள் சித்திரங்கோட்டில் எடை பதிவு செய்து விட்டு வோ்க்கிளம்பி, ஆற்றூா், திருவட்டாறு வழியாக அதிக தூரம் சுற்றி குலசேகரம் வந்தடைகின்றன. இதனால் கட்டுமானப் பொருள்களின் விலை அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் கனரக வாகனங்களை தவிா்த்து மினிலாரிகள் முன்பு இருந்த நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.