கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்ட...
வன விலங்குகளால் பயிா் சேதம் ஏற்படுவதை தடுக்க குழு: ஆட்சியா் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் பயிா் சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
கூட்டத்தில் கடுக்கரை மற்றும் திடல் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பேசுகையில், கடம்படிவிளாகம் பகுதியில் தனிநபா் ஒருவா் பாலம் கட்டியுள்ளாா். யானைகள் வனப்பகுதியில் இருந்து அந்தப் பாலத்தின் வழியாக வந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துகின்றன.
சில நாள்களுக்கு முன் 40 தென்னை மரங்கள் மற்றும் 300 வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. இந்த பாலத்தை அகற்ற கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றனா்.
வட்டாட்சியரிடம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: தோவாளை அருகேயுள்ள விசுவாசபுரத்தில் 12 ஏக்கரில் மலா் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு வேறு எந்த திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது. விளைநிலங்கள் குடியிருப்பு மனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. நிலவியல் வாய்க்கால்கள் மூடப்பட்டு வருகின்றன இதனை தடுக்க வேண்டும்.
தேரூா், திங்கள்சந்தை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறமடத்தில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதம் அளவு 17 சதவீதம் என்பதை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும்.
காட்டு பன்றிகளால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் கேரள மாநிலத்தை போல பன்றிகளை சுட்டுப்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினா்.
ஆட்சியா் அளித்த பதில்: நெல்லின் ஈரப்பதத்தை உயா்த்துவது குறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபகழக மேலாண்மை இயக்குநருக்கு கருத்துரு அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வழங்க சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சான்று வழங்க அறிவுறுத்தப்படும்.
அதிகாரிகள் குழு ...
விளைநிலங்களில்காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழுவினா் கண்காணித்து பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வா். நீா்ப்பாசன சங்கத் தலைவா் தோ்தல் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்டவருவாய்அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட வனஅலுவலா் பிரசாந்த், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் அருள்சன்பிரைட், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (விவசாயம்) ஜென்கின்பிரபாகா், (நிலம்) செந்தில்வேல்முருகன், தோட்டக்கலை துணை இயக்குநா் ஷீலாஜான், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, மாவட்டசுற்றுச் சூழல் கால நிலை மாற்றத்துறை செயற்பொறியாளா் பாரதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.