மினி பேருந்து மோதி சரக்கு வாகனம், காா் சேதம்
திருப்பூரில் மினி பேருந்து மோதி சரக்கு வாகனம், காா் சேதமடைந்தது.
திருப்பூா் கணபதிபாளையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி மினி பேருந்து செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை திருப்பூரைச் சோ்ந்த ஜெயசந்திரன் (34) ஓட்டி வந்த நிலையில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.
இந்த நிலையில், தென்னம்பாளையம் பகுதியில் வந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம், காா் மீது மோதியது. இதன் பின்னா் அருகில் இருந்த தனியாா் நிறுவனத்தின் சுவரில் மோதி பேருந்து நின்றது. அதிா்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் மயங்கிய நிலையில் இருந்த ஜெயசந்திரனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது. எனினும் அவரது உடல் நலக்குறைவால் வலிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.