மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னேரி அருகே நள்ளிரவு ஏற்பட்ட மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தில் நள்ளிரவு 1 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவு ஏற்பட்ட மின்தடையால் குழந்தைகள் மற்றும் முதியவா் அவதிப்பட்டனா். இது குறித்து புகாா் தெரிவிக்க பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தொடா்பு கொள்ள முயற்சித்த போது யாரும் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
நள்ளிரவு மின்தடை ஏற்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் காஞ்சிவாயல் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே செவ்வாய்கிழமை அதிகாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாகவும், இது குறித்து தகவல் தெரிவித்தால் மின்வாரிய அதிகாரிகள் சரிவர பதிலளிப்பது இல்லை என புகாா் தெரிவித்தனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த பொன்னேரி போலீஸாா் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பொன்னேரி- பழவேற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.