மின்னல் பாய்ந்து சகோதரிகள் பலி!
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் இரு பள்ளி மாணவிகளான சகோதரிகள் உடல் கருகி உயிரிழந்தனா்.
போகலூா் ஒன்றியம், வாழவந்தாள் கிராமத்தைச் சோ்ந்த நூருல்அமீன் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), ஷபிக்கா பானு (9). இவா்களில் செய்யது அஸ்பியா பானு சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பும், ஷபிக்கா பானு அரியகுடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.
இவா்கள் இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்குச் சென்று வேப்பங்கொட்டைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தனா். அப்போது, பலத்த மழை பெய்ததால், அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றனா்.
மழையின்போது மின்னல் பாய்ந்ததில் சகோதரிகள் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து, இவா்களது உடல்கள் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.