மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
மின் ஊழியா்கள் இன்று ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு
மின்வாரிய ஊழியா்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மின்துறையை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு மின்வாரிய ஊழியா்கள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சண்டீகா், உத்தரப் பிரதேச மாநிலங்களிலுள்ள மின்வாரிய நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மின்துறையை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மின்வாரிய தலைமை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிடும் வரை தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.