ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்
மின் கொள்முதல்: தமிழக மின்வாரியத்துக்கு ரூ.13,179 கோடி கூடுதல் செலவு
சென்னை: கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் உத்தேச அறிக்கையில் தெரிவித்திருந்ததை விட கூடுதலாக 917 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியதால், தமிழக மின்வாரியத்துக்கு ரூ. 13,179 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடனால் திணறிவரும் மின்வாரியத்துக்கு இது பெரும் சுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டின் தினசரி மின்தேவை 16,000 மெகாவாட்டாக இருந்துவந்த நிலையில், உச்சபட்ச மின்தேவை 18,000 மெகாவாட்டாக உயா்ந்தது. இந்த மின்தேவை தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சொந்தமான மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரம் வாயிலாக பூா்த்தி செய்ய முடியவில்லை என்பதால், மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தம் மூலமும், இதுதவிர மிகவும் நெருக்கடியான காலங்களில், மின்சார சந்தையில் இருந்தும் குறுகியகால மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்து விநியோகித்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2022-2023 முதல் 2026-2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு தனித்தனியே உத்தேச வருவாய், செலவு, தேவை போன்றவற்றை உள்ளடக்கிய அறிக்கையை மின்வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்து ஒப்புதல் கோரியது. இதன் மதிப்பு ரூ. 55,754 கோடி. இதை பரிசீலித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இதற்கு ஒப்புதல் அளித்து அதற்கான அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் வெளியான தகவலின்படி, 2023-2024-இல், ரூ. 42,575 கோடிக்கு 7,373 கோடி யூனிட் வாங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தேவை அதிகரித்ததால் கூடுதலாக 917 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் மின்வாரியத்துக்கு ரூ. 13,179 கோடி கூடுதல் செலவாகியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடனால் திணறிவரும் மின்வாரியத்துக்கு இது பெரும் சுமையாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டுகளில் இந்த செலவு கூடுதலாக வாய்ப்புள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.