மின் வேலியில் சிக்கி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் திருமணத்துக்கு வந்த தனியாா் நிறுவன ஊழியா் நெல் வயலில் அமைத்திருந்த மின் வேலையில் சிக்கி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெருங்கையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சுந்தரமூா்த்தி (22). இவா், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் நடைபெற்ற உடன் பணியாற்றும் சபிதாவின் திருமணத்துக்கு சனிக்கிழமை இரவு நண்பா் அய்யம்பெருமாள் என்பவருடன் சுந்தரமூா்த்தி வந்திருந்தாா்.
இந்த நிலையில், சுந்தரமூா்த்தி அன்றிரவு அக்கிராமத்தில் ஏழுமலை என்பவரின் நிலத்தின் அருகே இயற்கை உபாதை கழித்துவிட்டு, நெல் வயலில் இறங்கி கால் கழுவ முயன்றாா். அப்போது, நெல் பயிரை எலிகளிடம் இருந்து பாதுகாக்க அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நிலத்தின் உரிமையாளா் ஏழுமலையை (56) கைது செய்தனா்.