``மியூசிக் போடாம 2 வருஷம் ஜோசியம் பார்த்தேன்'' - `காதல்' பட இசையமைப்பாளர் ஜோஷ்வா ஶ்ரீதர்
பாலாஜி சக்திவேலின் `காதல்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜோஷ்வா ஶ்ரீதர்.
இவருடைய பாடல்கள் பலவும் எவர்கிரீனாக பலரின் ஃபேவரிட்டாக இருக்கிறது. இப்படியானவர் கொரோனா சூழலுக்குப் பிறகு எந்தத் திரைப்படத்திற்கும் இசையமைக்கவில்லை. இது குறித்து கேட்டால், ``அது நானாக எடுத்து முடிவுதான்!' என்கிறார். `ஏன் இந்த முடிவு?' என்ற கேள்வியுடன் தொடங்கிய இந்த உரையாடல் அவருடைய கரியரின் பல பக்கங்களைப் புரட்டியது.
நம்மிடையே பேச தொடங்கிய ஜோஷ்வா ஶ்ரீதர், ``2020-லதான் முழுமையாக இசையமைப்பதை நிறுத்தினேன். அதுக்கு முன்னாடி இருந்து நினைச்சுட்டேதான் இருந்தேன். எனக்கு பிடிக்காத திரைப்படங்களாக தொடர்ந்து வந்துச்சு. வருமானத்துக்காக தொடர்ந்து இசையமைச்சுட்டே இருந்தேன். ஒரு 5 படம் வந்ததுனா அதுல இரண்டு படங்கள்ல 15 வருஷமாக இதையேதான் பண்ணிக்கிட்டு இருந்தேன். இத்தனை வருஷமாக பிடிக்காத விஷயங்களை பண்றோம்னு எனக்குள்ள ஒரு நெருடல் இருந்தது. 5 வருடமாக நான் இசையமைககாமல் இருக்கேன். இது நானாக எடுத்த முடிவுதான். எனக்கு நெருடல் இருந்த சமயத்துல மனசுக்குள்ள பல யோசனைகள் இருந்தன. அந்த நேரத்துலதான் கோவிட் வந்தது. நமக்குனு நேரம் வருது. இந்த சமயத்துல மியூசிக் பண்ணாமல் இருந்திடலாம்னு யோசிச்சேன். அப்போ ஒரு 6 மாதம் கொரோனா சூழல்ல கடந்து போயிடுச்சு.
எனக்கு சிறு வயசுல இருந்தே ஜோதிடம் மேல ஆர்வம் இருந்தது. கொரோனா காலகட்டம் தொடங்கிய 6 மாசத்துல ஜோதிடம் கத்துக்கிட்டேன். அதன் பிறகு ஒரு இரண்டு பேருக்கு ஜோசியம் சொன்னேன். அவங்களுக்கு அந்த விஷயமெல்லாம் நடந்து அவங்க மத்தவங்ககிட்ட போய் சொல்லி நிறைய பேர் வர ஆரம்பிச்சுட்டாங்க. இந்த விஷயம் இரண்டு வருஷம் வரைக்கும் போச்சு. அதன் பிறகு நான் பங்குசந்தை வணிகம் பண்ணலாம்னு என்னுடைய ஜோதிடம் மூலம் தெரிஞ்சது. முதலீடு பண்ணினேன்.
இப்போ அதுல இருந்து வர்ற பணம்தான் என்னுடைய மாத வருமானம்!" என்றவர், `` 19 வயதுல மியூசிக் படிக்கும்போதும் ஒரு பெண்ணை காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டேன். இசை மேலுள்ள ஆர்வத்துனால ஒரே வருஷத்துல 8 வகுப்புகள் இசை பற்றி படிச்சிட்டேன். ஒரே வருஷத்துல படிச்சு முடிச்சுட்டு ராஜா சார்கிட்ட சேர்றணும்னு விருப்பப்பட்டேன். அந்த சமயத்துல அவருடைய ஸ்டுடியோ ஏ.வி.எம்-ல இருந்தது. அங்க போய் தினமும் நின்னுட்டு இருந்தேன். அங்க இருக்கிற கம்போஸர்ஸ் எல்லோரு எனக்கு பழக்கமானாங்க. அதன் பிறகு கார்த்திக் ராஜாவை மீட் பண்ணி `உங்க அப்பாகிட்ட நான் வாசிக்கணும் ஆர்வமாக இருக்கேன்'னு சொன்னேன்.
அவரும் என்னுடைய நம்பரை வாங்கிட்டு கூப்பிடுறதாகச் சொன்னார். அவருடைய அழைப்பு வரவே இல்ல. பிறகு, ராஜா சார் வீட்டுக்கே போயிட்டேன். ஆனால், அன்னைக்கு அவங்க வீட்டுல இல்ல. மாலை நேரத்துலதான் வருவாங்கன்னு சொன்னாங்க. நானும் வீட்டுக்கு போயிட்டு அவங்க வர்ற நேரத்துக்கு முன்னாடியே போய் நின்னுட்டேன். அந்த சமயம்னு பார்த்து மழை வேற வரத் தொடங்கிடுச்சு. மழைல நனைஞ்சதும் என்னை நினைச்சு எனக்கே பாவம் ஆகிடுச்சு. அந்த சூழல்ல எனக்கு அழுகையும் வந்திடுச்சு. அதன் பிறகு கார்த்திக் ராஜா கூப்பிட்டு `இங்க ஏற்கெனவே ஆட்கள் இருக்கிறாங்க. ரெண்டு வருஷம் கழிச்சு பார்க்கலாம்'னு சொன்னார்.
ரொம்பவே மனசு உடைஞ்சு வீட்டுக்கு வந்துட்டேன். நான் அப்போ கிறிஸ்துவனாக மாறியிருந்தேன். சர்ச்ல மியூசிக் பண்ணிட்டு இருந்தேன். அப்படி சர்ச்ல பண்ணின என்னுடைய ஆல்பத்தைப் பார்த்துட்டு ரஹ்மான்கிட்ட புல்லாங்குழல் வாசிக்கிற ஒருவர் கால் பண்ணிக் கூப்பிட்டார். அவர்கூட வேலைகளை கவனிச்சுட்டு இருந்தேன். அப்புறம், இவர் மூலமாக மணி சர்மாகிட்ட சேர்ந்தேன். அப்போதான் மணி சர்மா படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். தொடக்க காலத்துல நான் அவர்கூட இருந்தேன். ஆனால், அவர்கிட்ட குறைவாகதான் சம்பளம் கிடைத்தது. இசைதுறையில நமக்கான இசைப் பொருட்கள் வாங்கிட்டே இருக்கணும்.
அந்த சம்பளமும் எனக்கு போதல. பிறகு இவரைவிட 100 மடங்கு அதிகமாக சம்பளம் கொடுக்கிற ஒரு இந்தி இசைமைப்பாளர்கிட்ட சேர்ந்தேன்.
அவர்கிட்ட வேலைப் பார்த்துட்டு இருக்கும்போது எனக்கு ரஹ்மான்கிட்ட வேலை பார்க்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. ரஹ்மான்கிட்ட `பார்த்தாலே பரவசம்', `லகான்', `பாய்ஸ்' போன்ற படங்கள்ல வேலை பார்த்தேன். இதற்கிடையில என்னுடைய மனைவியிடமிருந்து எனக்கு விவாகரத்து ஆகிடுச்சு. அதுக்கப்புறம் ஷங்கர் சாரை சந்திச்சேன். அப்படிதான் `காதல்' திரைப்படத்தோட வாய்ப்பு கிடைச்சது. இந்தப் படத்தோட ரிலீஸுக்கு முன்னாடி இன்னொரு பெண்ணை நான் காதலிச்சேன்.
இந்த விஷயம் அந்த பெண் வீட்டுல தெரிய வந்து என் மேல குற்றத்தை சுமத்தி என்னை ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. எனக்கும் அந்த நேரத்துல ஜாமீன் கிடைக்கவே இல்லை. படம் முடிஞ்சு நான் ஜெயிலில் இருந்து வெளிய வர்றதுக்குள்ள `காதல்' திரைப்படம் வெளியாகிடுச்சு. வெளிய வந்ததும் பாலாஜி சக்திவேல் சார் எனக்கு இப்படி நடந்ததை எண்ணி வருதப்பட்டார். அந்த கஷ்ட காலம் கடந்த வருடத்தோட முடிஞ்சிடுச்சு!" என்றார்.
இவரின் முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் :