மிளகாய்ப் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தல்: 2 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்!
குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி 4 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில், தனிப்படைக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் அந்தச் சிறுவனை மீட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பவள தெருவில் மென் பொறியாளர் வேணு என்பவர் தனது நான்கு வயது மகன் முகேஷை உணவு இடைவேளைக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டு வாசலில் நின்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் மிளகாய்ப்பொடியை முகத்தில் தூவி, தந்தையின் கண் எதிரே குழந்தையை காரில் கடத்தியுள்ளனர்.
கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட அந்த வெள்ளை நிற சொகுசு காரில் கடத்தியதைக் கண்டு தந்தை வேணு, கூச்சலிட்ட நிலையில், அதிவேகத்தில் கார் அங்கிருந்து சென்றுள்ளது.
இதனால் பதட்டத்துடன் குடியாத்தம் நகர காவல் நிலையத்துற்கு வேணு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக குடியாத்தம் நகர காவல் துறையினர், அனைத்து நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து, மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தி நான்கு திசையிலும் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இதனிடையே, மாவட்ட காவல் காணிப்பாளர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தற்போது, குழந்தை மாதனூர் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு அருகே தனியாக நின்றுக் கொண்டிருந்ததை அறிந்து, தனிப்படை காவல்துறையினர் அங்கிருந்து மீட்டுள்ளனர்.
குழந்தையைக் கடத்திச் சென்றவர்கள் பிடிபடவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை கடத்தப்பட்ட இடத்திற்கும் மீட்கப்பட்ட இடத்திற்கும் சுமார் பத்து அல்லது பதினைந்து கிலோமீட்டர் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும், குழந்தையைக் கண்டுப்பிடித்த தனிப்படை காவல் துறையினருக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.
இதையும் படிக்க: கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?