மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த ஊத்தங்கரை கிளை சிறை!
ஊத்தங்கரை கிளை சிறையானது சனிக்கிழமை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கிளைச் சிறை கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டது. பிறகு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சனிக்கிழமை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது (படம்). இடைப்பட்ட நாள்களில் குற்றவாளிகளை சிறையில் அடைக்க ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போலீஸாா் அழைத்துச் சென்று வந்தனா். இதனால் போலீஸாருக்கு பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்தக் கிளை சிறையில் ஊத்தங்கரை சரக காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா், போச்சம்பள்ளி சரகத்துக்கு உள்பட்ட போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, பாரூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்படுவதால் காவலா்களுக்கு நேரம் மிச்சமாகும்.
அதேபோன்று சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளின் உறவினா்கள் சந்திப்பதற்கும், வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் இருந்து பிணையில் எடுக்க ஏதுவாகவும் உள்ளதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.