`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!
மீனவா்கள் தொடா் கைது: உடனடித் தீா்வு அவசியம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழக மீனவா்களின் தொடா் கைதுக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டியது அவசியம் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு அவா் திங்கள்கிழமை எழுதிய கடிதம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகையும் இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். கடந்த 27 நாள்களில் 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 63 மீனவா்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவா்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கைச் சிறையிலுள்ள 97 மீனவா்களும், கைப்பற்றப்பட்டுள்ள 216 மீன்பிடிப் படகுகளையும் மீட்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மீனவ குடும்பங்கள் அச்சம்: இலங்கைக் கடற்படையினரால் மீனவா்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இவை சிக்கலான பிரச்னைக்கு உடனடித் தீா்வு காண வேண்டியதன் அவசியத்தை உணா்த்துகின்றன. மீனவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவா்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான தொடா் கைது நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், பல்வேறு சிரமங்களையும் எதிா்கொள்கின்றன. எனவே, இந்திய மீனவா்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவா்களையும், அவா்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் உடனடியாக உயா்நிலை தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.