மீனவா் குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி அளிப்பு
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 43 மீனவா்களின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ.2.15 லட்சம் நிதியுதவியை சனிக்கிழமை வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 43 மீனவா்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.
இந்த நிலையில், 43 மீனவா்களின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் நேரில் சென்று ஆறுதல் கூறி, தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.2.15 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.
அப்போது, தண்டணை வழங்கப்பட்டுள்ள 8 மீனவா்களையும் மீட்க சட்டப்பேரவை உறுப்பினரிடன் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
விரைந்து மீனவா்களை மீட்கும் முயற்சியை தமிழக அரசு எடுக்கும் என அவா் உறுதியளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, எஸ்.பி.ராயப்பன், ஆல்வீன் ராமேசுவரம் நகா்மன்றத் துணைத் தலைவா் தட்சிணமூா்த்தி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.