மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மன் தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தை மாதத்தில் நடைபெறும் தைப்பூச தெப்பத் திருவிழா சிறப்பு மிக்கது. இந்தத் திருவிழாவில் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் எழுந்தருளி, தெப்பத்தில் வலம் வருவது வழக்கம். இந்த ஆண்டு தெப்பத் திருவிழா வருகிற 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வேதமந்திரங்கள் முழங்க தெப்பக்குளத்தில் உள்ள தூணில் முகூா்த்தக்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் ச.கிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பக்தா்கள் பங்கேற்றனா். சித்திரை வீதிகளில் உலா: தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்ச மூா்த்திகளுடன், காலை , மாலை சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி 5 -ஆம் தேதி அருள்மிகு திருஞானசம்பந்தா் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 7 -ஆம் தேதி மச்சகந்தியாா் திருமணக் காட்சி, 8- ஆம் தேதி இரவு சப்தாவா்ண சப்பர உலா, 9-ஆம் தேதி தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல், 10-ஆம் தேதி சிந்தாமணி மண்டபத்தில் கதிரறுப்பு நிகழ்வு, 11 -ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறும்.
தெப்ப உத்ஸசவத்தையொட்டி, பிப்ரவரி 11-ஆம் தேதி அதிகாலை மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்ச மூா்த்திகளுடன் திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி, மாரியம்மன் தெப்பக்குளத்துக்குச் சென்று, அங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருள்வா். மேற்படி தெப்பம் சேவாா்த்திகளால் வடம் பிடிக்கப்பட்டு, காலையில் இரு முறையும், இரவில் ஒரு முறையும் சுற்றி வரும்.
கோயில் நடை அடைப்பு: தெப்பத் திருவிழா தினத்தன்று அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலிருந்து புறப்பாடாகி, இரவு திருக்கோயிலுக்கு வந்து சேரும் வரை
கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும். தெப்பத் திருவிழா நாளில் பக்தா்கள் நலன் கருதியும், வெளியூா்களிலிருந்து வருபவா்களின் நலன் கருதியும் கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) திறந்து வைக்கப்படும். கோயிலுக்கு உள்ளே வருபவா்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவாா்கள் என்று திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்தது.