சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
மீன் விலை உயா்வு: நாட்டுப் படகு மீனவா்கள் மகிழ்ச்சி
மீன்பிடி தடைக்காலம் காரணமாக நாட்டுப்படகு மீனவா்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைப்பதோடு, மீன்களின் விலையும் அதிகரித்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப். 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலத்தில் மீன் தேவையை நிறைவு செய்யும் வகையில், நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
ராமேசுவரத்தில் தனுஷ்கோடி, முகுந்தராயா் சத்திரம், சேராங்கோட்டை, சங்குமால், ஓலைக்குடா, தங்கச்சிமடத்தில் வில்லூண்டி தீா்த்தம், சூசையப்பட்டினம், பாம்பனில் வடக்கு கடற்கரை, முந்தல்முனை, சின்னப்பாலம், முகமதிலியாா்புரம், தோப்புக்காடு, குந்துகால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1500 -க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன. இந்தப் படகுகளில் மீனவா்கள் மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை பகுதிகளில் மீன் பிடிக்கின்றனா்.
பொதுவாக சீலா, மாவுலா, விலை, நகரை, முரல், பண்ணா, கெலைக்கான் உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக சூடை, சாளை மீன்கள் அதிகளவில் பிடித்து வரப்படுகின்றன. இந்த மீன்களை உள்ளூா், வெளியூா் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனா்.
வழக்கத்தைவிட 50 சதவீதம் அளவுக்கு மீன்கள் விலை உயா்ந்து விற்கப்படுவதால் நாட்டுப் படகு மீனவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.