வட சென்னை வளா்ச்சி திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும்: அமைச்சா் சேகா்பா...
முகநூலில் அறிமுகம்... வடிவேல் பட பாணியில் வீட்டில் தங்க நகைகள், செல்போனை திருடிய ஆசாமி!
சென்னை திரு.வி.கநகரை சேர்ந்தவர் சுமித்ரா (52). (பெயர் மாற்றம்) இவருக்கு முகநூல் மூலம் சிவா என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். இவர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்திருக்கின்றனர். கடந்த 27.11.2024-ம் தேதி சுமித்ராவைச் சந்திக்க அவரின் வீட்டுக்கு சிவா சென்றிருக்கிறார். அதனால் இன்ப அதிர்ச்சியடைந்த சுமித்ரா, முகநூல் நண்பர் சிவாவுக்கு தேநீர், டிபன் கொடுத்திருக்கிறார்.
அதன்பிறகு இருவரும் பேசி கொண்டிருந்திருக்கிறார்கள். இதையடுத்து சுமித்ரா, அலுவலகம் செல்வதற்காக குளித்துவிட்டு வருவதாக சிவாவிடம் சொல்லிவிட்டு பாத்ரூம்பிற்கு சென்றிருக்கிறார். குளித்து விட்டு வெளியில் வர கதவை சுமித்ரா திறந்தபோது கதவு வெளிபக்கமாக பூட்டியிருந்தது. அதனால் சிவாவை அழைத்து கதவை திறக்க சுமித்ரா கூறியிருக்கிறார். நீண்ட நேரமாகியும் யாரும் வரவில்லை.
இதையடுத்து சுமித்ராவை பாத்ரூம் கதவை உடைத்து வெளியில் வந்திருக்கிறார். குளிக்க செல்வதற்கு முன்பு சாமி போட்டோ முன்பு சுமித்ரா கழற்றி வைத்திருந்த 4 மோதிரங்கள், தங்கச் செயின், தாலிச் செயின், வளையல் என 8 சவரன் தங்க நகைகளும் செல்போனும் திருட்டு போயிருந்தது. வீட்டிலிருந்த சிவாவையும் காணவில்லை. அப்போதுதான் முகநூல் மூலம் அறிமுகமாகிய சிவா, தங்க நகைகள், செல்போனை திருடியதை சுமித்ரா உணர்ந்தார்.
பின்னர் இதுகுறித்து திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் சுமித்ரா புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிவாவின் செல்போன் நம்பரைக் கொண்டு விசாரணை நடத்தினர். பின்னர் சிவாவை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் உண்மையான பெயர் ஐயப்பன் (39), குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஐயப்பனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 21 கிராம் எடையுள்ள தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஐயப்பன் மீது ஏற்கெனவே திருச்சி, கோவையில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முகநூல் மூலம் பெண்களிடம் அறிமுகமாகும் ஐயப்பன், அவர்களின் வீட்டுக்குச் சென்று கைவரிசை காட்டி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.