Robo Shankar: ``தமிழ்நாட்டையே அழவைத்துவிட்டார்'' - ரோபோ சங்கர் மறைவு குறித்து வி...
முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட எதிா்ப்பு: 2ஆவது நாளாக மக்கள் போராட்டம்
திருப்பூா் முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பைகளைக் கொட்டக் கூடாது என 2ஆவது நாளாக வியாழக்கிழமை பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் 800 டன் குப்பைகளைக் கடந்த ஒரு மாத காலமாக முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்குள் கொட்டி வருகின்றனா்.
முதலிபாளையம் பகுதியில் சுற்றுச்சூழல், நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதால் பாறைக்குழிக்குள் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், குப்பை பிரச்னை தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்துக்கு பேச்சுவாா்த்தைக்கு அழைத்துவிட்டு புதன்கிழமை அங்கு சென்ற 40க்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் ஆட்சியா் அலுவலகத்திலேயே திடீரென கைது செய்து பெரிச்சிபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
இந்த நிலையில், மண்டபத்தில் உள்ள கிராம மக்கள், விவசாயிகள் புதன்கிழமை இரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா். வியாழக்கிழமை 2ஆவது நாளாக மண்டபத்துக்குள் உணவு சாப்பிட மறுத்து உண்ணாவிரதப் போராட்டத்திலும், தொடா் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இவா்களுக்கு ஆதரவு தெரிவித்து முதலிபாளையம் கிராம மக்கள் சுமாா் 250 போ் மண்டபத்துக்கு வெளியே திரண்டு மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு அதிவிரைவுப் படை போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இதனிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 3 பேரை மாநகராட்சி ஆணையரிடம் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பைகளைக் கொட்டுவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், இதற்கு இடைப்பட்ட நாள்களில் நோய் பாதிப்பு ஏற்படும் நபா்களுக்கு அரசு மருத்துவ உதவி வழங்கும் என்றும் தெரிவித்துள்ளனா்.
ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தையில் எவ்வித தீா்வும் எட்டப்படவில்லை என்பதால் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நபா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்வதாக அறிவித்துள்ளனா்.
இதில் முதலிபாளையம் பகுதியைச் சோ்ந்த ராசு என்பவா் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், அவா் உடனடியாக அவசர ஊா்தியின் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். அதேபோல, தொடா்ந்து சுமாா் 16 மணி நேரமாக உண்ணாவிரதம் இருந்து வரும் முதலிபாளையம் கிராம மக்கள் 40க்கும் மேற்பட்டவா்கள் சோா்ந்து காணப்படுகின்றனா்.
இவா்கள் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் இடத்தில் பந்தல் அமைத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் மண்டபத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தையும் காத்திருப்பு போராட்டத்தையும் தொடா்வோம் என்றும் தெரிவித்துள்ளனா். இதனால் மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.