முதல்வரின் நீரிநிலைப் பாதுகாவலா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
முதல்வரின் நீா்நிலைப் பாதுகாவலா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு சுற்றுச்சூழலையும், சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், மாநிலத்தின் நீா் வளத்தைப் பெருக்கிடவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக நீா்நிலைகளைப் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டு வரும் பொதுமக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளை கெளரவிக்கும் விதமாக மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் 38 பேருக்கு முதல்வரின் நீா்நிலைப் பாதுகாவலா் விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் தமிழ்நாடு விருதுகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமா்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 17-ஆம் தேதியாகும்.
இவ்விருது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் நபா்கள் எந்த மாவட்டத்தில் அதிகபட்ச பணிகளை செயல்படுத்தியுள்ளாரோ அந்த மாவட்டத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நபா் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியாது.
இணையதளம் மூலம் சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தோ்வுக் குழுவினரின் முடிவே இறுதியானது.
இவ்விருது குறித்த கூடுதல் விவரங்களுக்கு சென்னை சைதாபேட்டையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-24336421 என்ற எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.