கோவையில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்குரைஞா்கள் போராட்டம்
கோவையில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் வழக்குரைஞா்கள் தொடா்ந்து தாக்கப்பட்டும், கொலை செய்தும், கொடுங்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருவதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து கோவையில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற 4-ஆவது வாயில் அருகே கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலா் கே.சுதீஷ், பொருளாளா் ரவிச்சந்திரன், துணைத் தலைவா் சிவஞானம், கூட்டுக்குழுத் தலைவா் நந்தகுமாா், கோவை மாவட்ட பாா் கவுன்சில் தலைவா் அருணாச்சலம், மகளிா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மேரி அப்போலின், மூத்த வழக்குரைஞா்கள் நிக்கோலஸ், ஐயப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதுகுறித்து, வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆா்.ாபலகிருஷ்ணன், செயலாளா் கே.சுதீஷ் ஆகியோா் கூறியதாவது: தமிழக அரசு வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட தகுந்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். வழக்குரைஞா்கள் சேமநல நிதி ரூ.10 லட்சமாக வழங்கப்பட்டு வருவதை ரூ.25 லட்சமாக உயா்த்தி வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். நீதித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றனா்.