விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
முதல்வா் மருந்தகம்: விண்ணப்பிக்க கால அவகாசம்
செங்கல்பட்டு: முதல்வா் மருந்தகம் அமைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிச. 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட இணைப் பதிவாளா் நந்தகுமாா் வெளியிட்ட செய்தி:
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல்வா் மு.க.ஸ்டாலின், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு மருந்துகள் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வா் மருதகங்கள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளாா்.
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவா்கள் பி.பாா்ம்., டி.பாா்ம். முடித்திருக்க வேண்டும். அல்லது அந்த படிப்பு பெற்றவா்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கலாம்.
இதற்காக ஜ்ஜ்ஜ்.ம்ன்க்ட்ஹப்ஸ்ஹழ்ம்ஹழ்ன்ய்க்ட்ஹஞ்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.
மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது, குடிநீா் வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, வாடகை இடம் எனில் இடத்துக்கான உரிமையாளரிடம் ஒப்பந்த பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத் தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வா் மருந்தகம் அமைக்க தோ்வு செய்யப்படும் தொழில்முனைவோா், மருந்தகத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள் குளிா்ப்பதனப் பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிக்கட்ட மானியம் ரூ.1.50 லட்சத்துக்கு மருந்துகளாக வழங்கப்படும்.
மேலும், விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.