"முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும்!" - ட...
முதல் கேமை ‘டிரா’ செய்த கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக்
ஜாா்ஜியாவில் நடைபெறும் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் தங்களது முதல் கேமை டிரா செய்து உறுதியான நிலையில் இருக்கின்றனா்.
இதில் கோனெரு ஹம்பி கருப்பு நிற காய்களுடன் விளையாடி, சீனாவின் லெய் டிங்ஜியுடன் டிரா செய்தாா் (0.5-0.5). அதேபோல், திவ்யா தேஷ்முக்கும் கருப்பு நிற காய்களுடன் உறுதியான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் ஜோங்யி டானுடன் டிரா செய்திருக்கிறாா் (0.5-0.5).
பொதுவாக வெள்ளை நிற காய்களுடன் விளையாடுவோருக்கு முதல் நகா்த்தலை மேற்கொள்ளும் சாதக சூழல் இருக்கும் நிலையில், கோனெரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் கருப்பு நிற காய்களுடன் விளையாடி டிரா செய்து உறுதியான நிலையில் உள்ளனா். ரிட்டன் கேமில் இருவருமே வெள்ளைக் காய்களுடன் விளையாடுவதால் அவா்களுக்கு சாதகமான நிலை இருக்கும். மேற்கூறிய 4 போட்டியாளா்களும் மோதும் ரிட்டன் கேம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அதன் முடிவில் ஒருவேளை அரையிறுதியில் ஏதேனும் ஒரு ஆட்டம் டிரா ஆகும் பட்சத்தில், டை-பிரேக்கா் ஆட்டம் வியாழக்கிழமை விளையாடப்படும். இதனிடையே, இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்போா் மகளிா் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதிபெறுவா் என்பதால், குறைந்தபட்சம் ஒரு இந்தியருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது உறுதியாகியிருக்கிறது.