முதுமலை புலிகள் காப்பக வனத்தில் புலியின் சடலம் மீட்பு!
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் புலி சடலமாக கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வனச் சரகத்துக்கு உள்பட்ட நீரல்லா பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது கூடாா்வயல் வனப் பகுதியில் புலி உயிரிழந்துகிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா். பின்னா் உயிரிழந்த புலியின் சடலத்தை உடற்கூறாய்வு செய்து அதன் முக்கிய உள்ளுருப்புகளை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டு அதே இடத்தில் சடலத்தை எரியூட்டினா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், உயிரிழந்த பெண் புலிக்கு சுமாா் ஏழு வயதிருக்கும். இந்தப் புலி எதனால் இறந்தது என்பது குறித்து ஆய்வகப் பரிசோதனை முடிவின் அறிக்கைக்கு வந்த பிறகுதான் தெரியவரும் என்றனா்.