`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்துகொண்டு தலைமைதாங்கினர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ,``இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிரான ஒருவரை நாம் சின்னமாக்கப் போகிறோமா? படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல். சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோவை விட ஔரங்கசீப்தான் ஒரு அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்டால், அது ஒரு சுதந்திரப் போராட்டம். அவர்களுக்கு முன் இருந்தவர்களுக்கு எதிரான போராட்டமும் ஒரு சுதந்திர இயக்கமாகும். இது மதத்தைப் பற்றிய முடிவல்ல. ஆர்.எஸ்.எஸ்-ஸின் உறுதியான பார்வையும் இதுதான். வக்ஃப்பிற்காக அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. இதுவரை அரசின் செயல்பாடுகள் சரியாகத்தான் செல்கிறது. இதற்குப் பிறகு அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்." என்றார்.
இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே சமூக வலைதளங்களில் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டது தொடர்பான விவாதம் நடந்துவருகிறது. இந்த நிகழ்வில் வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருந்தது. கன்னடப் பலகைகள் இல்லாதது சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைத் ஏற்படுத்தியிருக்கிறது. மாநில மொழிகளைப் புறக்கணித்து இந்தியை ஆர்.எஸ்.எஸ் ஊக்குவிப்பதாகக் கண்டித்துள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
